Published : 24 Dec 2020 07:21 AM
Last Updated : 24 Dec 2020 07:21 AM

உயிர் பாதுகாப்பில் அலட்சியம் வேண்டாம் 4 சக்கர வாகனங்களில் பம்பர்களைஅகற்றாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை சோதனை தீவிரம்

சென்னை

உயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல், கார் உள்ளிட்ட 4 சக்கரவாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சாலை விபத்துகளால் ஏற்படும்உயிரிழப்புக்கு 4 சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர்களை பொருத்தக் கூடாது என மத்தியஅரசின் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2017-ல் உத்தரவிட்டது.

ஆனால், கார்களை வாங்கும் பெரும்பாலானோர், கார் விபத்தில் சிக்கும்போது காருக்கு சேதாரம் ஏற்படுவதைத் தவிர்க்க ‘கிராஷ் கார்டு' எனப்படும் பம்பரை பொருத்துகின்றனர். அதேநேரம், சாலைவிபத்தின்போது உயிரிழக்க இந்தபம்பர்களும் காரணமாக அமைந்துவிடுகிறது என்பது பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை.

எனவே, விதிகளை மீறி பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம்முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வரு கின்றனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு வகை வாகனமும் தயாரிக்கும் முன்பே, அவசியமான வடிவமைப்பு குறித்து ஆராய்ச்சி செய்த பிறகே, தயாரிக்கப்படுகின்றன. ஆனால், வாகனஉரிமையாளர்கள் சிலர், வாகனங்களில் கூடுதலாக தங்களின் வசதிக்காக பம்பரை பொருத்துகின்றனர்

வாகனங்களில் பம்பர் போன்றவற்றைப் பொருத்த போக்குவரத்து துறை தடை செய்துள்ளது. சாலை விபத்து ஏற்பட்டால், அவர்களின் உயிரிழப்பு ஏற்படுவதற்கு அந்த வாகனங்களில் பொருத்தியுள்ள பம்பரும் முக்கிய காரணமாகும்.

இதுதவிர, பாதசாரிகளுக்கும், இதர வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே,வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை உடனே அகற்ற வேண்டும். அகற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு போக்குவரத்து சட்டத்தின்படி 6 மாதம் சிறை தண்டணை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பம்பர் குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: சாலைகளில் வாகனத்தில் பயணம் செய்யும்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டால், வாகனங்கள் சேதமடைந்தாலும், பயணிப்போரின் உயிரைக் காப்பாற்றும் வகையில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கார் போன்ற வாகனங்களின் முன்பகுதிகளில் பம்பர் பொருத்துவதால், வாகனங்கள் மோதும் அதேவேகத்தில் உள்ளே இருப்பவர்களுக்கும் பலத்த காயமோ, உயிரிழப்போ ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், ‘ஏர்பேக்’ வசதியுள்ளவாகனங்கள் விபத்தில் சிக்கும்போது, ‘ஏர் பேக்' விரிவடைவதை பம்பர் தடுத்து விடுகிறது. இதனால்உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும். காரின் முகப்பு, உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ் வாறு அவர் கூறினார்.

சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ இதுகுறித்து கூறியதாவது:

4 சக்கர வாகனங்களில் பம்பர்களை அகற்ற வேண்டும் என்றுபோக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் வாகனங்களில் எக்ஸ்ட்ரா பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

மேலும், ஏர்பேக் இல்லாத வாகனங்களில் மேற்கொள்ளவுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x