Last Updated : 17 Nov, 2020 03:13 AM

 

Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முடக்கம்: நிபுணத்துவம் பெற்றவர்களை உடனடியாக அமர்த்த கோரிக்கை

சென்னை

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 2013-ம்ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தஆணையம் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களை கொண்டதாக இயங்கி வருகிறது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தை அமல்படுத்துவதை கண்காணிக்கும் பொறுப்பும் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தின் தலைவர்3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.கடந்த ஜன.8 முதல் தலைவர் பதவியும் மே மாதம் முதல் உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன. பல மாதங்கள் ஆகியும் இன்று வரை நியமிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக, குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் அ.தேவநேயன் கூறும்போது, ‘‘ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு தீர்வு காணுவதும், அவர்களுக்கு உதவுவதும் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பணியாகும்.

ஆனால், தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக இருப்பதால் ஆணையம் செயல்படாமல் முடங்கி உள்ளது. எனவே,இந்த இடங்களை உடனே நிரப்பவேண்டும். குழந்தைகள் உரிமை,பாதுகாப்பு, உளவியல் நிபுணத்துவம் மற்றும் கள அனுபவம் கொண்டவர்களை மட்டுமே இப்பதவிகளில் நியமிக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தன்னாட்சி கொண்ட அமைப்பாக செயல்பட வேண்டும்’’ என்றார்.

இதுதொடர்பாக, சமூக நலத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு நிறைய விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் நியமிப்பதற் கான வாய்ப்பு உள்ளது.

ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிப்பவர்கள் குழந்தைகளை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர்களாகத்தான் உள்ளனர். எனவே, எந்த தலையீடும் இன்றி தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் அமைப்பாகத்தான் ஆணையம் செயல்பட்டு வருகிறது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x