Published : 12 Dec 2021 03:08 AM
Last Updated : 12 Dec 2021 03:08 AM

சமூக ஊடகங்கள், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட - தொழில்நுட்பங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் : அமெரிக்க மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்

புதுடெல்லி

வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களான சமூக ஊடகங்கள் மற்றும் கிரிப்டோ கரன்சி ஆகியவை ஜனநாயகத்தை வலுப்படுத்த உதவும் காரணிகள் என்றுபிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஜனநாயகம் குறித்த அமெரிக்க மாநாட்டில் தேசிய அறிக்கையை தாக்கல் செய்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஜனநாயக அமைப்பு வலுப்பெறுவதற்கு கூட்டாட்சி மிகவும் அவசியமானது. இதை இந்தியாவின் வெளிப்படையான, நேர்மையான தேர்தல் நடைமுறைகள் உணர்த்தியுள்ளன. அரசின் வெளிப்படையான செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படுவதோடு அதற்கு உறுதுணையாக டிஜிட்டல்மூலமான தீர்வுகளும் பயன்படுத்தப்படுகின்றன. வளர்ந்து வரும் சமூகத்தில் ஊடகங்கள் மற்றும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்த உதவும். எனவே, இவை இரண்டின் பயன்பாட்டையும் குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. கூட்டாட்சி முறையில் முடிவுகளை மேற்கொள்வது இந்திய ஜனநாயகத்தின் அங்கமாக விளங்குகிறது. அதைத்தான் அனைத்துசெயல்பாடுகளும் வெளிப்படுத்து கிறது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பணியில் தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்து ஜனநாயக சமூகத்தை வலுப்படுத்த உதவியுள்ளன.

இந்த மாநாட்டில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா குறித்த விவரங்களை தாக்கல் செய்வது மிகவும் பெருமையாக உள்ளது. இந்தியாவின் பாரம்பரியமரபுகளோடு ஜனநாயகத்தை கட்டிக் காக்கும் விதமான செயல்பாடுகளும் வெளிப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஜனநாயக செயல்பாடுகள் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.

சமூக பொருளாதாரத்தில் அனைவரும் பங்கேற்கும் வகையில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். அதேபோல மக்களின் சுகாதாரம், கல்வி, மக்களின் வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட அனைத்து தளங்களும் தற்போது மேம்பட்டுள்ளது. இதைத்தான் உலக நாடுகளுக்கு இந்தியா உணர்த்த விரும்புகிறது.

சீனாவை புறக்கணிக்கும் விதமாக குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகள் புறக்கணிப்பது சரியான நடவடிக்கையா என்பதை இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் அந்தந்த நாடுகளின் தலைவர்கள் உணர வேண்டும்.

நம்பிக்கை வேண்டும்

ஜனநாயக அமைப்பில் பன்முக அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தேர்தல், சுய அதிகாரம் படைத்த நீதி அமைப்பு, சுதந்திரமான ஊடக செயல்பாடு ஆகியன மிகவும் முக்கியமானவையாகும். இவற்றுக்கெல்லாம் அடிப்படையானது ஜனநாயகம் மீதான நம்பிக்கையும் அதை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமான பிடிப்பும் நாட்டு மக்களுக்கும் சமூகத்திற்கும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x