Published : 11 Dec 2021 03:07 AM
Last Updated : 11 Dec 2021 03:07 AM

காபூலில் இருந்து ஆப்கன்கள் உட்பட 110 பேர் இந்திய விமானம் மூலம் மீட்பு :

காபூலில் இருந்து ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 110 பேரை சிறப்பு விமானம் மூலம் இந்தியா மீட்டு அழைத்து வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்தவுடன் அங்கிருந்த இந்தியர்களை மீட்டு அழைத்து வர சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. அங்கிருந்த குருத்வாராக்களில் தங்கியிருந்த சீக்கியர்களும் அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் அங்கு சிக்கியிருந்த மேலும் சில இந்தியர்களை அழைத்து வர இந்திய வெளியுறவுத்துறை சார்பில் சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த விமானம் நேற்று காலை 110 பேருடன் காபூலில் இருந்து இந்தியா வந்திறங்கியது.

இதில் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிலரும் அடக்கம். மேலும் இந்துக்கள், சீக்கியர்களும் அந்த விமானத்தில் பயணித்தனர் என்று இந்தியா வேர்ல்டு ஃபாரம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாராக்களில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ குரு கிரந்த சாகிப் புத்தகங்களும், காபூலின் அசாமை மந்திரில் இருந்த 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை புத்தகங்களும் விமானத்தில் கொண்டு வரப்பட்டன.

விமானத்தில் வந்த ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களின் மறுவாழ்வுக்காக சோப்டி பவுண்டேஷன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

காபூலில் இருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ குரு கிரந்த சாகிப் புத்தகங்கள் மகாவீர் நகரிலுள்ள குரு அர்ஜுன் தேவ் ஜியின் குருத்வாராவுக்கும், இந்து சமயத்தைச் சேர்ந்த புத்தகங்கள் ஃபரீதாபாதிலுள்ள அசாமை மந்திருக்கும் அனுப்பப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் முதல் ஆப்கானிஸ்தானிலிருந்து 565 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x