Published : 07 Dec 2021 03:06 AM
Last Updated : 07 Dec 2021 03:06 AM
நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 372ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் 540 ரன்கள் இலக்கை துரத்திய நியூஸிலாந்து அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 140ரன்கள் என்ற நிலையில் நேற்று4-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது.
மேற்கொண்டு 27 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட எஞ்சிய 5 விக்கெட்களையும் ஜெயந்த் யாதவ், அஸ்வின் வீழ்த்தினர். இதனால் நியூஸிலாந்து அணி 56.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய அணி சார்பில் அஸ்வின், ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது. சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற பெரிய வெற்றியாக இது அமைந்தது. இதற்கு முன்பு, 2015-ல் டெல்லியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது.
மயங்க் அகர்வால், ஆட்ட நாயகனாகவும் அஸ்வின் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மும்பை டெஸ்ட் வெற்றியின் மூலம் ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT