Published : 03 Dec 2021 03:06 AM
Last Updated : 03 Dec 2021 03:06 AM
உலகின் மிக அதிக செலவு கொண்ட நகரங்கள் பட்டியலில் இஸ்ரேல் நகரங்களில் ஒன்றான டெல் அவிவ் இடம்பெற்றுள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த பொருளாதார புலனாய்வுப் பிரிவு (இஐயு) நடத்திய இந்த ஆய்வில் பாரீஸ், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.
உலக அளவில் நகரங்களில் வாழ்வதற்கான குறியீடு அமெரிக்க டாலர் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதன்படி 173 நகரங்களில் நடத்தப்பட்டது. உலகளவில் வாழ்க்கை நடத்த எந்த நகரத்தில் செலவு அதிகமாகிறது என்பதை கண்டறிவது இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதில் டெல் அவிவ் நகரம்முதலிடத்தைப் பிடித்துள்ளது. டாலருக்கு நிகரான அந்நாட்டுகரன்சி ஸ்திரமாக இருந்ததும் இதற்கு முக்கியக் காரணமாகும். மேலும் டெல் அவிவ் நகரில் பொருள்களின் விலை, போக்குவரத்து செலவு ஆகியனவும் மிக அதிகமாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மூன்றாமிடத்தை ஜூரிச் நகரும், நான்காம் இடத்தை ஹாங்காங்கும் பிடித்துள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரம் ஆறாவது இடத்திலும், ஜெனீவா 7-வது இடத்திலும் உள்ளன. முதல் பத்து இடங்களில் உள்ள நகரங்களில் கோபன்ஹேகன், லாஸ் ஏஞ்சலீஸ், ஒசாகா ஆகிய நகரங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் பாரீஸ், ஜூரிச், ஹாங்காங் ஆகிய நகரங்கள் கூட்டாக முதலிடத்தைப் பிடித்தன.
இந்த ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது பொருள்களின் விலை சராசரியாக 3.5 சதவீதம் உயர்ந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடு நடவடிக்கைகள் பொருள்கள் போக்குவரத்தில் மிகப் பெரும் சிக்கலை உருவாக்கியதாகவும், பொருள்கள் தட்டுப்பாடு காரணமாக அவற்றின் விலைஉயர்ந்ததாகவும் இஐயு அமைப்பின் தலைவர் உபாசனா தத் தெரிவித்துள்ளார்.
பொருள்கள் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் பெட்ரோல் விலையேற்றமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் மிகக்குறைந்த செலவு பிடிக்கும் நகராக டமாஸ்கஸ் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT