Published : 02 Dec 2021 03:05 AM
Last Updated : 02 Dec 2021 03:05 AM
ஓராண்டாக நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது இறந்த விவசாயிகள் குறித்து அரசிடம் எந்தஆவணமும் இல்லை. எனவே அவர்களின் குடும்பங்களுக்கு மத்தியஅரசு சார்பில் இழப்பீடு வழங்கும் திட்டம் இல்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதையடுத்து இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது. இந்நிலையில், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குமா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில், “இந்த விவகாரத்தில் மத்தியவேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தில் எந்த ஆவணமும் இல்லை. எனவே இதற்கான கேள்விஎழவில்லை” என்று தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர்முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்தின்போது 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததாக போராட்டத் தலைவர்களும் எதிர்க்கட்சியினரும் கூறி வருகின்றனர். கடும் குளிர், மழை போன்ற சூழ்நிலையால் ஏற்பட்ட நோய் மற்றும் தற்கொலை காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டன.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ள போதிலும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து உள்ளிட்ட பிற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை விவசாயிகள் தொடர்கின்றனர்.
இந்நிலையில், குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரத்தில் அரசுடன் பேச 5 பிரதிநிதிகளின் பெயரை தெரிவிக்குமாறு சம்யுக்தகிசான் மோர்ச்சா அமைப்பிடம் மத்திய அரசு கேட்டுள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் நேற்று கூறும்போது, “பெயர்களை இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. வரும்சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்வோம்” என்றார்.போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குவது குறித்து மாநில அரசுகள்தான் முடிவு செய்யவேண்டும் என அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT