Published : 30 Nov 2021 03:06 AM
Last Updated : 30 Nov 2021 03:06 AM

இந்திய அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை - கான்பூர் டெஸ்ட் போட்டியை டிரா செய்த நியூஸி. :

கான்பூர்

கான்பூர் டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு டிரா செய்தது நியூஸிலாந்து அணி.

கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் 284 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் 2 ரன்களுடனும் வில்லியம் சோமர்வில் ரன் ஏதும் எடுக்காமலும் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொண்டனர்.

முதல் செஷன் முழுவதும் இந்தஜோடி சீராக ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட் விழாமலும் பார்த்துக்கொண்டது. 2-வது செஷன் தொடக்கத்தில் சோமர்வில் 110 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். டாம் லேதம் 146 பந்துகளில் 52 ரன்களில் அஸ்வின் பந்தில் போல்டானார்.

இதன் பின்னர் ராஸ் டெய்லர் 2 ரன்னிலும், அதீத தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட கேன் வில்லியம்சன் 112 பந்துகளில், 24 ரன்னிலும் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தனர். ஹென்றி நிக்கோல்ஸ் 1, டாம் பிளெண்டல் 2, கைல் ஜேமிசன் 5, டிம் சவுதி 4 ரன்களில் நடையை கட்டினர். 155 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து நியூஸிலாந்து அணி தத்தளித்தது. எனினும் கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய இந்திய வம்சாவளி (மும்பை) வீரரான அஜாஸ் படேல், மற்றொரு இந்திய வம்சாவளி வீரரான (கர்நாடகா) ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்து அபாரமாக தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு இந்திய அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

மேற்கொண்டு ஒரு விக்கெட்டை கைப்பற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடுமையாக போரா டினர். ஆனால் ரவீந்திராவும், அஜாஸ் படேலும் 8.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடினர். நியூஸிலாந்து அணி 98 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டத்தை தொடர முடியாது என கள நடுவர்கள் அறிவித்தனர். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

ரச்சின் ரவீந்திரா 91 பந்துகளில் 18 ரன்னும், அஜாஸ் படேல் 23 பந்துகளில் 2 ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2-வது டெஸ்ட் வரும் 3ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.

அஸ்வின் அசத்தல்...

கடைசி நாள் ஆட்டத்தில் டாம் லேதமை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். சர்வதேச டெஸ்டில் அஸ்வின் கைப்பற்றிய 418-வது விக்கெட் இதுவாகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் ஹர்பஜனை பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறினார் அஸ்வின்.

இந்த மைல்கல்லை அஸ்வின் தனது 80-வது போட்டியில் கடந்துள்ளார். ஹர்பஜன் 103 போட்டியில் 417 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். இந்த வகை சாதனையில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்களும், கபில்தேவ் 434 விக்கெட்களும் வீழ்த்தி முதல் இரு இடங்களில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x