Published : 26 Nov 2021 03:06 AM
Last Updated : 26 Nov 2021 03:06 AM
டெல்லி அருகேயுள்ள நொய்டா வில் புதிய சர்வதேச விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் டெல்லி அருகேயுள்ள உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் ரூ.10,050 கோடியில் 1,330 ஏக்கரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுகிறது. இது ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையம், சர்வதேச அளவில் 4-வது மிகப்பெரிய விமான நிலையமாக அமையும். இந்த விமான நிலையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
புதிய இந்தியாவில் நாட்டின்உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் சாலை வசதி மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரயில் பாதை விரிவாக்கம் செய்யப்படுகிறது. பல்வேறு நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உதான் திட்டத்தின் மூலம் சிறு நகரங்களிலும் விமான சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. நொய்டாவில் அமையும் சர்வதேச விமான நிலையம் டெல்லி, என்சிஆர் பகுதிகள் மற்றும் மேற்கு உத்தரபிரதேச மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
இந்தியாவின் 85 சதவீதவிமானங்களின் பராமரிப்பு வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் நொய்டா விமான நிலையத்தில் 40 ஏக்கரில் விமான பராமரிப்பு மையம் கட்டப்பட உள்ளது. இதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சுதந்திரத்துக்குப் பிறகு உத்தர பிரதேசம் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. முந்தைய அரசுகளின் ஆட்சியில் மக்கள்வறுமையில் வாடினர். அனைத்துதுறைகளிலும் ஊழல் மிகுந்திருந்தது. பாஜக அரசு பதவியேற்ற பிறகு உத்தர பிரதேசத்தின் பிம்பம் முழுமையாக மாறியது. மத்தியிலும் உத்தர பிரதேசத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுவதால் மாநிலம் அதிவேகமாக முன்னேறி வருகிறது. முதல்வர் யோகி ஆதித்ய நாத் மிகச் சிறந்த செயல்வீரர். அவரது தலைமையில் மக்கள் நலத் திட்டங்கள் வேகம் பெற்றுள்ளன. சில அரசியல் கட்சிகள் சொந்த குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டுமே அக்கறை செலுத்துகின்றனர். பாஜக அரசு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறது" என்றார்.
ஆசியாவிலேயே பெரியது
விழாவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசும்போது, "ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையத்தை உத்தர பிரதேசத்தில் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி விரும்பினார். இதன்படி தற்போது நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் கட்டப்படுகிறது. இதன் முதல் கட்ட பணி வரும் 2024-ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும்" என்றார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT