Published : 25 Nov 2021 03:11 AM
Last Updated : 25 Nov 2021 03:11 AM
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் (பிஎம்ஏஒய்) கீழ் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3.61 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையிலான மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்பு குழு (சிஎஸ்எம்சி) இதற்கான அனுமதியை வழங்கியது.
இந்தத் திட்டத்தின் மொத்த முதலீடு ரூ.7.52 லட்சம் கோடியாகும். இதில் மத்திய அரசின் உதவி ரூ.1.85 லட்சம் கோடியாகும். இதில் இதுவரை ரூ.1.13 லட்சம் கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை 1.14 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 89 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுமானப் பணிக்காக இடிக்கப்பட்டு, அந்த இடங்களில் இதுவரை 52.5 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில் துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா பேசும்போது, “பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் துரிதப்படுத்த வேண்டும். அப்பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே 2022-ம்ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடைய முடியும்” என கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், ஒருங்கிணைக்கப்பட்ட புதிய மின்னணு நிதியுதவி தளத்தை மிஸ்ரா தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு நேரடிப் பணப்பரிமாற்ற முறையில் நிதியை வழங்குவதற்கும் பயனாளிகளை சரிபார்ப்பதற்கும் தனித்துவமான தளமாக இது இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT