Published : 23 Nov 2021 03:05 AM
Last Updated : 23 Nov 2021 03:05 AM

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய - குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

இந்திய விமானப்படையில் குரூப் கேப்டனாக பணியாற்றும் அபிநந்தனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தார். படம்: பிடிஐ

புதுடெல்லி

பாகிஸ்தான் விமானத்தை சுட்டுவீழ்த்தி சாகசம் புரிந்த குரூப்கேப்டன் அபிநந்தன் வர்த்தமானுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் வர்த்தமான், இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி தீவிரவாத முகாம்களை அழித்தன.

2019-ம் ஆண்டு பிப்ரவரி 27- தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை வீரர் அபிநந்தன், மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார்.

இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் நாட்டின் எல்லைப்பகுதிக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்தது. பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் பின்னர், மத்திய அரசின் முயற்சியாலும், உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவும் விடுவிக்கப்பட்டார். பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து அந்நாட்டின் போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியதற்காக அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப்படையின் 51-வது படைப்பிரிவை பாராட்டி குழு விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து அபிநந்தனுக்கு அவரது வீரத்தை பாராட்டி வீர் சக்ரா விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ராணுவகமாண்டர் அபிநந்தன், குழு கேப்டனாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x