Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM
உலகம் முழுவதும் சுற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த டீக்கடைக்காரர் கே.ஆர். விஜயன் நேற்று முன்தினம் காலமானார்.
கேரளாவின் கொச்சி நகரில் டீக்கடை நடத்தி வந்தவர் கே.ஆர்.விஜயன் (71).இவர், தனது மனைவி மோகனாவுடன் ஏராளமான நாடுகளுக்குச் சென்று கேரள மாநிலம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பிரபலமானவர். இவரின் சுற்றுலாப் பயண விவரங்களை பல்வேறுபத்திரிகைகள் செய்திகளாக வெளியிட்டு பெருமைப்படுத்தின. சுற்றுலா செல்வதற்காகவே வங்கியில் கடன் பெற்று அந்தக் கடனையும் முறையாகத் திருப்பிச் செலுத்தி வந்துள்ளார் விஜயன். அவரின் வங்கிக் கணக்குகளைப் பார்த்த வங்கி நிர்வாகம் தொடர்ந்து அவர் சுற்றுலா செல்லவும் கடன் அளித்துள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் ரஷ்யாவிலிருந்து விஜயனும், அவரின் மனைவி மோகனாவும் சுற்றுலாவை முடித்துக்கொண்டு கேரளா வந்தனர். அடுத்ததாக, ஜப்பான், வியட்நாம், கம்போடியா நாடுகளுக்குச் செல்ல இருவரும் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் விஜயனுக்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
டீக்கடை மூலம் வந்த வருமானத்தின் மூலம் இதுவரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 26 நாடுகளுக்கு மனைவியுடன் சென்று வந்துள்ளார் விஜயன். கடந்த ஆண்டு, 'சாயா வீட்டு விஜயன்டேயும் மோகனாயுடேயும் லோக சஞ்சாரங்கள்' என்ற தலைப்பில் விஜயன், மோகனா தம்பதி புத்தகம் வெளியிட்டிருந்தனர்.
விஜயனின் திடீர் மறைவுக்கு கேரளசுற்றுலாத் துறையும் அஞ்சலி செலுத்தியுள்ளது. கேரள சுற்றுலாத்துறை தனதுட்விட்டர் பக்கத்தில் விஜயனின் புகைப்படத்தைப் பதிவிட்டு, “இறுதிப் பயணத்தைத் தொடங்கிய துணிச்சல் பயணி” எனத் தெரிவித்துள்ளது. அவரது மறைவுக்கு எழுத்தாளர் என்.எஸ். மாதவன் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT