Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் 20% முதலீடு - சவுதி ஆராம்கோ நிறுவனத்துடனான ஒப்பந்தம் பற்றி மறு பரிசீலனை :

புதுடெல்லி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் சவூதி அரேபியாவின் ஆராம்கோ நிறுவனம் மேற்கொள்ளவிருந்த 20% முதலீட்டுத் திட்டத்தைக் கைவிடுவது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பரிசீலித்து வருகிறது.

முதலீடு செய்வதற்காக விதிக்கப்பட்ட இரண்டு கால வரையறைகள் முடிவடைந்த நிலையில் இத்திட்டத்தைக் கைவிடலாம் என்ற முடிவுக்கு ரிலையன்ஸ் வந்துள்ளதாகத் தெரிகிறது. 2019-ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை ஆராம்கோ வாங்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய (1,500 கோடி டாலர்) அந்நிய முதலீடாக இது கருதப்பட்டது. இந்த திட்டம் கைவிடப்பட்டாலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் விரும்பத்தக்க முதலீட்டு நிறுவனமாக ஆராம்கோ கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களிலும் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுவதாக இருந்தது.

2019-ம் ஆண்டு முகேஷ் அம்பானி முதலீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டபோது, இந்த முதலீடு 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இறுதி செய்யப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முதலீட்டுத் திட்டம் தள்ளிப்போனது.

இந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்திலும் முதலீட்டு திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக முகேஷ் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் முதலீடு தொடர்பான திட்டவட்டமான அறிவிப்பை ஆராம்கோ வெளியிடவில்லை. இதனால் இத்திட்டத்தை மறு பரிசீலனை செய்யப் போவதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

எண்ணெய் முதல் ரசாயனம் என்ற ஓ2சி வர்த்தகப் பிரிவு உருவாக்கத் திட்டத்தை தேசிய நிறுவன சட்ட ஆணையத்திடம் ரிலையன்ஸ் தாக்கல் செய்திருந்தது. இப்போது அந்த பரிந்துரையையும் திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x