Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி.
173 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோரது அதிரடியில் 7 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது.போட்டி முடிவடைந்ததும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கூறியதாவது:
எங்களின் பந்துவீச்சுக் குழுவில் ஜோஸ் ஹேசல்வுட் முக்கியமான நபர். சிஎஸ்கே அணியில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை எல்லாம் எங்களிடம் ஹேசல்வுட் பகிர்ந்துகொண்டார். அதிலும் குறிப்பாக இறுதிப் போட்டியில் எவ்வாறு பந்து வீசுவது, விக்கெட்களை வீழ்த்துவது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்ந்து சரியான திசையில், சிறந்த நீளத்தில் எவ்வாறு பந்து வீசுவது என்பதை எங்களிடம் ஹேசல்வுட் பகிர்ந்துகொண்டார். உண்மையில் ஹேசல்வுட் பந்துவீச்சை அடிப்பது ஆட்டத்தில் கடினமாகத்தான் இருந்தது. எங்களிடம் பல அற்புதமான, முக்கியமான தகவல்களை ஹேசல்வுட் பகிர்ந்து கொண்டார். ஐபிஎல் தொடரில் ஹேசல்வுட் சிறப்பாகச் செயல்பட்டது எங்களுக்கு உலகக் கோப்பை போட்டியில் உதவியது.
டி 20 உலகக் கோப்பை தொடங்க 2 வாரங்களுக்கு முன் வார்னரின் பேட்டிங் திறமையைக் குறைத்து மதிப்பிட்டு செய்த செயல்களை என்னால் நம்ப முடியவில்லை. அவ்வாறு செய்வது ஒருவரை கடும் கோபத்துக்கு உள்ளாக்குவது போலாகும். வார்னரை உசுப்பேற்றினார்கள். விளைவு அவர், மிகப்பெரிய ஸ்கோரை உலகக் கோப்பையில் அடித்து, அணிக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.
இந்த உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களால் நான் பெருமைப்படுகிறேன். மிட்சல் மார்ஷ் ஆட்டத்தைத் தொடங்கிய வேகமே, எதிரணிக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது. மேத்யூ வேட் காயம் காரணமாக அமர, மார்ஷ் மூன்றாவது வீரராகக் களமிறங்கி, தனது பணியை முடித்தார். இவ்வாறு ஆரோன் பின்ச் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT