Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM

இந்தியாவுக்கு - எஸ்-400 ஏவுகணைகள் விநியோகம் தொடங்கியது : ரஷ்ய அரசின் உயர் அதிகாரி தகவல்

மாஸ்கோ

இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணைகள் விநியோகம் தொடங்கிவிட்டதாக ரஷ்ய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அல்மாஸ் சென்ட்ரல் டிசைன் பீரோ அமைப்பால் தயாரிக்கப்பட்டது எஸ்-400 ட்ரையம்ப். இது தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணை சாதனம் ஆகும். குறிப்பாக எதிரி நாடுகளின் ஏவுகணையை இடைமறித்து தாக்கும் திறன் கொண்டது.

ரஷ்யாவில் இது கடந்த 2007-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த ஏவுகணையை வாங்க 2014-ல் சீனா முதன்முதலில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்தது. பின்னர் சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் ஒப்பந்தம் செய்தன. அந்த வகையில் இந்த ஏவுகணையை வாங்க 2018-ம் ஆண்டு இந்தியாவும் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.

இந்நிலையில், ரஷ்ய ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு மையத்தின் இயக்குநர் டிமிட்ரி ஷுகேவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, எஸ்-400 ரக ஏவுகணைகள் தடுப்புசாதனங்கள் விநியோகம் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே திட்டமிட்டபடி விநியோக நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

இதனிடையே, எஸ்-400 ரகஏவுகணைகளின் முதல் தொகுப்புஇந்தியாவை வந்தடைந்துவிட்ட தாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் அச்சுறுத்தல் அதிகமாக உள்ள பகுதியில் இவை விரைவில் பணியில் ஈடுபடுத்தப்படும் எனத் தெரிகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு ஆயுத ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவர் அலெக்சாண்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் கூறும்போது, “ஒப்பந்தம் செய்துள்ள 7 நாடுகளுக்கு எஸ்-400 ஏவுகணைகளை அனுப்பிவைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” எனகூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x