Published : 13 Nov 2021 03:07 AM
Last Updated : 13 Nov 2021 03:07 AM
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 2003 முதல் 2006 வரையிலான காலத்தில் ஐடிஎஸ் இன்ஃபோடெக் நிறுவனம் மூலமாக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் கணக்குகளுக்கு 740,128 யூரோ அதாவது ரூ 4.15 கோடி பணம் பரிவர்த்தனை ஆகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனத்திடமிருந்து போர் விமானங்கள் வாங்க இந்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தங்களில் சுஷென் குப்தா என்ற இடைத் தரகருக்கு 2007 முதல் 2012 வரையிலான காலத்தில் 7.5 மில்லியன் யூரோ அதாவது ரூ.65 கோடி லஞ்சம் தரப்பட்டதாகவும், அதுகுறித்த தகவல்கள் கிடைத்தும் சிபிஐ விசாரணை நடத்தவில்லை என்றும் 'மீடியாபார்ட்' என்ற இணைய செய்தி நிறுவனம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 2003 லிருந்து 2006 வரையிலான காலத்தில் டசால்ட் நிறுவனத்திடமிருந்து சுஷென் குப்தாவுக்குத் தொடர்புடைய இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு 740,128 யூரோ (ரூ.4.15 கோடி) பரிவர்த்தனை ஆகியுள்ளதாகக் கூறியுள்ளது.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணை அறிக்கைகளின்படி இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சுஷென் குப்தா, பணமோசடியாளர் என குற்றம்சாட்டப்பட்ட ராஜிவ் சக்சேனா, ஐடிஎஸ் இன்ஃபோடெக்கில் தொடர்புடைய பிரதாப் அகர்வால், வழக்கறிஞர் கவுதம் கைத்தான் ஆகியோர் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்தில் கமிஷன் பணம் பெற்று பயனடைந்தவர்களாகக் குறிப்பிட்டுள்ளது.
டசால்ட் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட கமிஷன் பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை ஐடிஎஸ் இன்ஃபோடெக்கின் கணக்கு மேலாளர் தீரஜ் அகர்வால் 2019 மார்ச் 18ல் சிபிஐயிடம் வழங்கிய வாக்குமூலத்தில் சமர்பித்துள்ளார்.
அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியதாவது, 2001ல் ஐடிஎஸ் இன்ஃபோடெக், இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் இடையே கமிஷன் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.
அந்த ஒப்பந்தத்தின்படி டசால்ட் நிறுவனத்துடனான போர் விமான ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பில் 40 சதவீதம் கமிஷனாக இன்டர்ஸ்டெல்லர் நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டிருந்தது.
இந்த கமிஷனை டசால்ட் நிறுவனத்திடமிருந்து மென்பொருள் சேவை வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ஐடிஎஸ் இன்ஃபோடெக் பெற்று பின்னர் இன்டர்ஸ்டெல்லர் நிறுவனத்துக்குப் பரிவர்த்தனை செய்யப்பட்டது. அதன்படி 7,40,128 யூரோ
ஐடிஎஸ் இன்ஃபோடெக்கிடமிருந்து இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸுக்குப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் முதல் ரபேல் ஒப்பந்தம் வரையில் இந்த லஞ்ச பரிவர்த்தனை நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. விவிஐபி சாப்பர் ஒப்பந்தத்தில் இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் முக்கிய பங்காற்றியிருப்பதை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆனால் சிபிஐ குற்றப்பத்திரிகையில் ராஜிவ் சக்சேனா குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சுஷென் குப்தா குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை. அதேசமயம் மே 2019ல் தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் சுஷென் குப்தா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்டர்ஸ்டெல்லர் டெக்னாலஜிஸ் நிறுவனம் பல்வேறு போர் விமானங்கள் சார்ந்த ஒப்பந்தங்களில் மூளையாகச் செயல்பட்டு ஆதாயம் அடைந்திருப்பதாகத் தெரிவித்தது. விசாரணையில் சக்சேனா அளித்த விவரங்களை வைத்து 2019 மார்ச்சில் சுஷென் குப்தாவை அமலாக்கத்துறை கைது செய்தது. மேலும் அவருக்குச் சொந்தமான இரண்டு குறிப்பு டைரிகளையும், ஒரு பென் டிரைவையும் கைப்பற்றியுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT