Published : 13 Nov 2021 03:07 AM
Last Updated : 13 Nov 2021 03:07 AM
அறிகுறிகளுடன் கூடிய கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 77.8 சதவீத திறனுடன் கோவேக்சின் தடுப்பூசி செயல்படுவதாக பிரிட்டனில் இருந்து வெளியாகும் 'லேன்சட்' மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு எதிராக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியும் இந்தியாவில் செலுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் இந்தியத் தயாரிப்பான கோவேக்சினுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்ததால், பிரிட்டன் உள்ளிட்ட பல உலக நாடுகள் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டோரை தங்கள் நாடுகளுக்கு அனுமதிக்காமல் இருந்து வந்தன. இந்நிலையில், பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து, கோவேக்சின் தடுப்பூசிக்கு பல உலக நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.
இந்த சூழலில், கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை கடந்த ஆண்டு நவம்பர் 16 முதல் நடப்பாண்டு மே 17-ம் தேதி வரை நடைபெற்றது. பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை முடிவுகள் உலக புகழ்பெற்ற லேன்சட் மருத்துவ இதழுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை தீவிரமாக ஆய்வு செய்த பின்னர், அண்மையில் பிரசுரமான லேன்சட் இதழில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 16,973 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 2,750 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். 5,724 பேர் இணை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள். இவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்திய 56 நாட்களுக்குள், அவர்களின் உடலில் வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பு உருவானது கண்டறியப்பட்டது. இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களை சோதித்து பார்த்ததில், 130 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனை வைத்து பார்க்கும் போது, அறிகுறிகளுடன் கூடிய கரோனா தொற்றுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசியானது 77.8 சதவீத திறனுடன் செயல்படுவது தெரியவந்துள்ளது. அதேபோல, இந்த தடுப்பூசியால் பெரிய அளவிலான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. மிகச்சிலருக்கு (12%) மட்டுமே தலைவலி, சோர்வு, ஊசி செலுத்திய இடத்தில் வலி உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு லேன்சட் இதழில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், “கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையை ஆராய்ந்து லேன்சட் மருத்துவ இதழ் வெளியிட்டிருக்கும் அறிக்கையானது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். கரோனா தடுப்பூசிகளுக்கு உலகின் தலைசிறந்த மருத்துவ இதழ்கள் நிர்ணயித்த தரத்தினை கோவேக்சின் எட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் பல்ராம் பார்கவா கூறும்போது, "சர்வதேச அளவில் புகழ்பெற்ற லேன்சட் இதழில், கோவேக்சின் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் வெளியாகி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை தந்துள்ளது. உலகில் உள்ள மற்ற முன்னணி கரோனா தடுப்பூசிகளில் இந்தியாவின் கோவேக்சினுக்கும் சிறப்பிடம் கிடைத்திருப்பதை இது உறுதி செய்கிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT