Published : 12 Nov 2021 03:14 AM
Last Updated : 12 Nov 2021 03:14 AM
மாநில அரசு, மக்களின் நண்பனாக, வழிகாட்டியாக, ஆலோசகராக ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று 51-வதுஆளுநர்கள் மாநாடு நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை வகித்தார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:
கரோனா வைரஸால் எழுந்த அசாதாரண சூழ்நிலையால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறோம். கரோனாவுக்கு எதிரான போரில் சுகாதார ஊழியர்களும் முன்களப் பணியாளர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினர். மிகக் குறுகிய காலத்தில் இந்திய விஞ்ஞானிகள் கரோனா தடுப்பூசிகளை கண்டுபிடித்து புதிய சாதனை படைத்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கரோனா தடுப்புதிட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டன. மத்திய, மாநிலஅரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்தின. கரோனாவுக்கு எதிரானபோரில் இந்தியாவின் செயல்பாட்டை உலக நாடுகள் மெச்சிபாராட்டி வருகின்றன. கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
இந்திய அரசமைப்பு சாசனத்தை வரையறுத்த நமது வல்லுநர்கள், ஆளுநர்களுக்கான பொறுப்புகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். இதன்படி மாநில அரசு, மக்களின் நண்பனாக, வழிகாட்டியாக, ஆலோசகராக ஆளுநர்கள் செயல்பட வேண்டும். மாநில மக்களின் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதற்காக அதிக நேரத்தை ஒதுக்க வேண்டும். தேசிய அளவிலான லட்சியங்களை எட்ட மக்களிடையே ஆளுநர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆளுநர்கள் எப்போதும் மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும். இதற்காக அனைத்து மாவட்டங்கள், கிராமங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய கல்விக்கொள்கை அமல்
கிளாஸ்கோவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா. சபை பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு இலக்குகளை அறிவித்தார். இந்த இலக்குகளை எட்ட ஆளுநர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
எதிர்கால இந்தியாவை கருத்தில் கொண்டு தேசிய கல்வி கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். நாட்டின் 70 சதவீத பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. நாட்டின் 80 சதவீத மாணவ, மாணவியர் இந்தபல்கலைக்கழகங்களில் கல்விபயில்கின்றனர். பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் பதவி வகிக்கின்றனர். எனவே தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் ஆளுநர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT