Published : 11 Nov 2021 03:06 AM
Last Updated : 11 Nov 2021 03:06 AM
வெளிநாடுகளில் இருந்து நிதி அளிப்பவர்கள் அதற்கான நோக்கத்தை தெரிவிக்காவிட்டால், அதைதொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) பெற அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டம் - 2010-ல், மத்திய அரசு கடந்த ஆண்டு சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி, தொண்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதன் முக்கியநிர்வாகிகள் தங்கள் ஆதார் எண்களை சமர்ப்பிக்க வேண்டும்; வெளிநாட்டு நிதியை பெறுவதற்கான கணக்குகளை டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட திருத்தங்களை மத்திய அரசு செய்தது.
இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த மாதம் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "வெளிநாட்டு நிதியுதவிகள் சில சமயங்களில் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதால் இந்த சட்டத்திருத்தம் அவசியமாகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஷ்வரி, சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடுகையில், “வெளிநாட்டு நிதி நக்சல் செயல் பாடுகளுக்கு சில தொண்டுநிறுவனங்கள் வழங்கி வருவதாகதகவல் கிடைத்தது. இதைத் தடுப்பதற்காகவே வெளிநாட்டு நிதிஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது அமலுக்கு வராவிட்டால் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும்" என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் பல திருத்தங்களை செய்த மத்திய அரசு, அதில் ஏற்கெனவே இருக்கும் ஒரு சட்டப்பிரிவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. அந்த சட்டத்தின்8-வது பிரிவின்படி, வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்குபவர்கள், அந்த நிதியை எதற்காக பயன்படுத்த வேண்டும் என தெரிவிப்பது கட்டாயம். ஆனால், மத்திய அரசு இந்தப் பிரிவை கண்டுகொள்ளாமல் நீர்த்து போகச் செய்துவிட்டது.
தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி அளிப்பவர்கள் அதற்கான நோக்கத்தை தெரிவிக்க வேண்டும். அதுபோன்று நோக்கம் தெரிவிக்காமல் வழங்கப்படும் நிதியுதவிகளை, தொண்டு நிறுவனங்கள் பெற அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT