Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM
மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
மகாராஷ்டிராவின் அகமதுநகரில் மாவட்ட அரசு மருத்துவ மனை செயல்படுகிறது. அங்குள்ள அவசர சிகிச்சை பிரிவில் 17 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சூழலில் நேற்று காலை 11.30 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
செவிலியர்களும், மருத்துவர் களும் நோயாளிகளை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவர்களில் பலர் முதியவர்கள் என்பதால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக 11 கரோனா நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
தீ விபத்து குறித்து உயர்நிலை விசாரணை நடத்த முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.
ரூ.5 லட்சம் இழப்பீடு
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் கூறும்போது, “தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “அகமதுநகர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “அகமதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நிதி பற்றாக்குறையால் தீ விபத்து தடுப்பு சாதனங்கள் போதிய அளவில் பொருத்தப்படவில்லை. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் தீ விபத்துகளை தடுக்க முடியும்” என்றார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT