Published : 29 Oct 2021 03:09 AM
Last Updated : 29 Oct 2021 03:09 AM

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை - இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மீண்டும் சந்தித்தால் நன்றாக இருக்கும் : சக்லைன் முஷ்டாக் கருத்து

துபாய்

ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதினால் சிறப்பானதாக இருக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்றில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில் இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதினால் சிறப்பானதாக இருக்கும் என பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான சக்லைன் முஸ்டாக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “இறுதிப்போட்டிக்கு இந்திய அணி வந்தால் சிறப்பானதாக இருக்கும் என உணர்கிறேன். நாங்கள் அவர்களை தோற்கடித்ததால் கூறவில்லை. இந்திய அணி வலுவானது. அனைவருமே அவர்கள்தான் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக கருதுகிறார்கள். மீண்டும் ஒரு போட்டியில் விளையாடுவது நமது உறவை வலுப்படுத்தும். முந்தைய ஆட்டத்தில், விராட் கோலி, தோனி மற்றும் எங்களது அணி வீரர்கள் கூட நடந்துகொண்ட விதம், நாம் அனைவரும் மனிதர்கள், நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம், இது ஒரு விளையாட்டு மட்டுமே என்ற வலுவான செய்தியை கூறியது.

இச்செய்தியை அனுப்பிய வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். நட்பு வெல்ல வேண்டும், பகை தோற்க வேண்டும். சாம்பியனாவதற்கு நீங்கள் எதிரணியை பார்க்கக்கூடாது, உங்கள் சொந்த ஆட்டத்திலேயே கவனம் செலுத்த வேண்டும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் வலுவான போட்டியாளர்களாக திகழ்கின்றனர். அர்ப்பணிப்பு, அணுகுமுறை மற்றும் செயல்முறை ஆகியவையே உங்கள் கைகளில் உள்ளன, ஆட்டத்தின் முடிவுகள் அல்ல. நீங்கள் யாராக விளையாடினாலும், நீங்கள் உங்கள் திட்டங்களைச் செயல்படுத்த முடியும். இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்தால், ஐசிசி மகிழ்ச்சியாக இருக்கும், ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்," என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x