Published : 26 Oct 2021 03:06 AM
Last Updated : 26 Oct 2021 03:06 AM

சமூக ஊடக பதிவை பெண்கள் லைக் செய்ததால் கணவருடன் சண்டை போட்ட மனைவி :

வடோதரா

குஜராத்தில் கணவரின் சமூக ஊடக பதிவை ஏராளமான பெண்கள் லைக் செய்ததால் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் வடோதரா நகரைச் சேர்ந்த ஒரு தம்பதி தனித்தனியாக சமூக ஊடகங்களில் கணக்கு வைத்துள்ளனர். அதில் இருவரும் தொடர்ந்து சில கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதில் கணவரின் பதிவுக்கு அடுத்த சில நிமிடங்களில் பல பெண்கள் லைக் செய்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து கவனித்து வந்த மனைவிக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. இதனால் பொறுமையை இழந்த அவர், கடந்த 22-ம் தேதி கணவரின் செல்போனை பறித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை அடித்துள்ளார்.

இதையடுத்து, அபயம் என்ற உதவி எண்ணில் தொடர்புகொண்ட மனைவி, கணவர் தன்னை அடிப்பதாக புகார் செய்துள்ளார். இதன்பேரில் உடனடியாக அங்கு விரைந்து சென்ற அபயம் ஆலோசகர்கள், சண்டைக்கான காரணத்தை உணர்ந்துள்ளனர்.

இதுகுறித்து ஆலோசகர் ஒருவர் கூறும்போது, “முதலில் மனைவியை அடிக்கக் கூடாது என்றும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றும் கணவருக்கு எச்சரிக்கை விடுத்தோம். அதேநேரம், சமூக ஊடக பதிவுக்கு பெண்கள் லைக் போடுவதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என மனைவிக்கு அறிவுரை கூறினோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x