Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM
உத்தராகண்டில் அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது. மலையேற்ற வீரர்கள் 9 பேரின் உடல் நேற்று கைப்பற்றப்பட்டதை அடுத்து, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உத்தராண்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மிக பலத்த மழை பெய்தது. இடைவிடாது பெய்த மழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்தது. கிட்டத்தட்ட அங்கு அனைத்து மாவட்டங்களுமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக, நைனிடால், சம்பாவத், சமோலி, பவுரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடும் சேதங்களை சந்தித்துள்ளன. மேலும், தொடர் மழையால் பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இவ்வாறு, உத்தராகண்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55-ஆக இருந்தது. அதிகபட்சமாக, நைனிடாலில் 34 பேரும், சம்பாவத் மாவட்டத்தில் 11 பேரும் உயிரிழந்தனர்.
இதனிடையே, கனமழைக்கு முன்பாக உத்தராகண்டில் உள்ள இமயமலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 11 பேர் மாயமாகி இருந்தனர். இந்நிலையில், அவர்களில் 9 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இவர்களையும் சேர்த்து உத்தராகண்ட் மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 5000-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் மற்றும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதிலும் இருந்து 3,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, வெள்ளம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் 200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் அனைவரும் மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி, இமாச்சலப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இந்த சூழலில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்களால் உத்தராகண்டில் தோராயமாக ரூ.7,000 கோடிக்கும் மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி டேராடூனில் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT