Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM
இந்தியாவின் கரோனா தடுப்பூசி திட்டம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் 100 கோடி கரோனா தடுப்பூசிகளை கடந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பல்வேறு சவால்களை தாண்டி நேற்று முன்தினம் 100 கோடி தடுப்பூசிகளை கடந்து புதிய சாதனை படைக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
இந்தியாவில் 100 கோடி கரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது 130 கோடி இந்தியர்களின் சாதனை. ஒவ்வொரு குடிமகனுக்கும் சாதனையில் பங்கிருக்கிறது. 100 கோடி தடுப்பூசிகள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. இது நமது நாட்டின் வலிமையை பறைசாற்றுகிறது. வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.
கடினமான இலக்குகளை நிர்ணயித்து அந்த இலக்குகளை எட்டிப் பிடிக்க புதிய இந்தியாவால் முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தடுப்பூசி திட்டம், உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. 100 கோடி தடுப்பூசிகளை தாண்டிய இந்தியாவின் வேகம் மெச்சப்படுகிறது.
உலக நாடுகளின் மருந்தகம்
தடுப்பூசி ஆராய்ச்சி, உற்பத்தியில் வளர்ந்த நாடுகள் மட்டுமே நிபுணத்துவம் பெற்றிருந்தன. வளர்ந்த நாடுகள் தயாரிக்கும் தடுப்பூசிகளையே இந்தியா நம்பியிருந்தது. இந்த காரணத்தினால் கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டதும், இந்தியாவால் பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை வாங்குவதற்கு தேவையான நிதியை இந்தியா எங்கிருந்து பெறும்? இந்தியாவுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும்? இந்திய மக்களுக்கு தடுப்பூசி கிடைக்குமா? தொற்று பரவலைத் தடுக்க அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த முடியுமா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 100 கோடி தடுப்பூசிகளை கடந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதுவும் பொதுமக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா மாறி வருகிறது.
கரோனா பெருந்தொற்றின் தொடக்க காலத்தில், இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவது மிகப்பெரிய சிக்கலாக இருக்கும் என்று கவலை தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை அமல்படுத்த முடியுமா? தடுப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுமா என்பன உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன.
அனைவருக்கும் தடுப்பூசி
அனைவருக்கும் அனைத்து பலன்களும் கிடைக்க வேண்டும். இதுவே இந்திய ஜனநாயகம். இதை முன்னிறுத்தி "இலவச தடுப்பூசி, அனைவருக்கும் தடுப்பூசி’ என்ற பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. ஏழை, பணக்காரர், கிராமவாசி, நகரவாசி என அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்துவதில் எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை.
வளர்ச்சியடைந்த நாடுகளில் தடுப்பூசி போடுவதற்கு அந்த நாடுகளின் மக்கள் தயங்கினர். இது சர்வதேச அளவில் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்தது. இந்திய மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி மையங்களுக்கு செல்வார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இந்திய மக்கள், 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி தக்க பதில் அளித்துள்ளனர். ‘கரோனாவுக்கு எதிரான போரில் மக்களின் பங்களிப்பு மிகப் பெரியது.
இந்தியாவின் கரோனா தடுப்பூசி திட்டம் அறிவியல் கருவில் பிறந்தது. அறிவியல் களத்தில் வளர்ந்தது. அறிவியல்ரீதியிலான நடைமுறைகள் வாயிலாக 4 திசைகளையும் வெற்றிகரமாக சென்றடைந்தது. இந்த வெற்றியில் நாட்டு மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம். தடுப்பூசி தயாரிக்கப்படுவதற்கு முன்பும், தடுப்பூசி செலுத்தப்படும் வரையிலும், ஒட்டுமொத்த திட்டமும் அறிவியல் அணுகுமுறையுடன் மேற்கொள்ளப்பட்டன.
கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது பெரும் சவாலாக இருந்தது. பல்வேறு மாநிலங்களில் தொலைதூர பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் தடுப்பூசியை அனுப்புவதும் சவாலாக இருந்தது. எனினும் அறிவியல்பூர்வமான நடைமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள் காரணமாக இந்த சவால்களுக்கு நாடு தீர்வை கண்டது. ஆதார வளங்கள் அசாதாரண வேகத்தில் அதிகரிக்கப்பட்டது. கோவின் இணையதளம், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறன் மருத்துவப் பணியாளர்களின் பணியை எளிதாக்கியது.
முதலீடு குவிகிறது
உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த நிபுணர்கள் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ஆக்கப்பூர்வக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்திய நிறுவனங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு முதலீடுகள் குவிந்து வருகின்றன. இளைஞர்களுக்காக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிதாக தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களில் அதிக அளவுக்கு முதலீடு செய்யப்படுகிறது. வீட்டு வசதித் துறையில் புதிய எழுச்சியைக் காண முடிகிறது.
கடந்த சில மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்கள், முன்முயற்சிகள் இந்தியப் பொருளாதாரத்தை வேகமாக வளர்ச்சியடைய செய்கிறது. கரோனா தொற்று காலத்தில் வேளாண் துறை நமது பொருளாதாரத்தை வலுவானதாக வைத்திருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்து வருகிறது. இதற்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
எந்தவொரு சிறிய பொருளை மக்கள் வாங்கினால்கூட அது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதா? இந்தியர்களின் கடின உழைப்பால் உருவாக்கப்பட்டதா என்பதை பார்த்து மக்கள் வாங்குகின்றனர். தூய்மை இந்தியா இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி வெற்றியடைந்தது. அதே வழியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கும் இயக்கத்தை வெற்றியடைய செய்ய வேண்டும்.
பண்டிகை கொண்டாட்டம்
போரின்போது பாதுகாப்பு கவசங்கள் முழுபாதுப்பு அளிக்கிறது என்பதற்காக ஆயுதங்களை தூக்கி வீசி விடக்கூடாது. பாதுகாப்பு கவசங்களும் அவசியம், ஆயுதங்களும் அவசியம். இதேபோல கரோனா தடுப்பூசி பாதுகாப்பும் அவசியம். அதேநேரம் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் என்ற ஆயுதங்களும் அவசியம். எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களை ஊக்குவிக்க வேண்டும். அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும். எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT