Published : 23 Oct 2021 03:06 AM
Last Updated : 23 Oct 2021 03:06 AM
மின் உற்பத்தி பாதிக்காமல் இருக்க கோல் இந்தியா சுரங்கங்களிலிருந்து 91 சதவீத நிலக்கரியை அனல் மின் நிலையங்களுக்கு விநியோகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனல் மின் நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பு இல்லாமல், மின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது நாடு முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மின் உற்பத்தி பாதிக்காத வகையில் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை விநியோகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
கோல் இந்தியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுரங்கங்களிலிருந்து 91 சதவீத நிலக்கரியை நாட்டிலுள்ள அனல் மின் நிலையங்களுக்கு விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எட்டு கோல் இந்தியா நிறுவனங்களில் அதிகளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் ஒடிசாவில் உள்ள மஹாநதி நிலக்கரி சுரங்கத்திலிருந்து ஒரு நாளைக்கு 96 ரேக் வீதம் மொத்தம் 289 ரேக் நிலக்கரி விநியோகம் செய்யப்பட உள்ளது. நாக்பூரில் உள்ள வெஸ்டர்ன் கோல்ட்ஃபீல்டிலிருந்து 30 ரேக் நிலக்கரி விநியோகம் ஆக உள்ளது.
இந்த விநியோக நடவடிக்கைகளை துரிதப்படுத்த தேவையான ஏற்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்த ரயில்வே துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
மின் துறை அமைச்சகத்தின் தகவல்படி குறைந்தபட்சம் 10 அனல் மின் நிலையங்களில் 5 முதல் 7 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு மட்டுமே உள்ளது. மேலும் இவற்றில் 8 அனல் மின் நிலையங்கள் நிலக்கரி சுரங்கங்களிலிருந்து 1500 கிமீ தொலைவில் உள்ளன. பிற அனல் மின் நிலையங்களிலும் குறைவாகவே நிலக்கரி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT