Published : 03 Oct 2021 03:10 AM
Last Updated : 03 Oct 2021 03:10 AM

அதிகாரிகள், போலீஸார் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு : தலைமை நீதிபதி வலியுறுத்தல்

புதுடெல்லி

அதிகாரிகள், போலீஸார் மீது சாமானிய மக்கள் அளிக்கும் புகார்களை விசரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தினார்.

அண்மையில் உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் போலீஸார் சோதனைக்குச் சென்று அங்கு ஒரு வர்த்தகர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்தில் பொது முடக்கக் காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மகனை அடித்துக் கொன்றதாக 9 போலீஸார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவது ஆகியவற்றை சுட்டிக்காட்டி இந்த கருத்தை தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட, கூடுதல் போலீஸ் டிஜிபி குர்ஜிந்தர் பால் சிங் தன்னை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கூடுதல் டிஜிபி மீது தேசத்துரோக வழக்கு, குற்றச்சதி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இந்த மனு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

சத்தீஸ்கர் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ராகேஷ் திரிவேதி ஆகியோரும், கூடுதல் டிஜிபி தரப்பில் விகாஸ் சிங், எப்எஸ் நாரிமன் ஆகியோரும் ஆஜராகினர். இந்த வழக்கில், தேசத்துரோக வழக்கிலிருந்து மட்டும் கூடுதல் டிஜிபியை கைது செய்ய தலைமை நீதிபதி விலக்கு அளித்தார்.

அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறும்போது, “ அரசு அதிகாரிகள் குறிப்பாக போலீஸார் செய்யும் கொடுமைகளை நினைத்து நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம். நாட்டில் அதிகாரிகள், குறிப்பாக போலீஸார் செய்யும் கொடுமைகள் குறித்து சாமானிய மக்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க நான் ஆதரவாக இருந்தேன்.

சமீபத்தில் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் இதை சுட்டிக்காட்டியது. அதாவது, ஒரு வழக்கில் ஒரு அரசிடம் இருந்து தண்டனை பெறாமல் தப்பிக்கும் போலீஸ் அதிகாரிகள், ஆட்சி மாற்றம் ஏற்படும்போது அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் நிலை வரலாம். இதற்கு முந்தைய காலங்களில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போது ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருந்த போலீஸ் அதிகாரிகள் பந்தாடப்படுவார்கள்.

இது வேதனைக்குரியதாகும். ஒரு அரசியல் கட்சிக்கு ஆட்சிக்கு வரும்போது, போலீஸ் அதிகாரிகள் ஒரு கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள். அடுத்த தேர்தலில் புதிய கட்சி ஆட்சிக்கு வரும்போது, கடந்த ஆட்சிக்கு விஸ்வாசமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நிலை மாறவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x