Published : 29 Sep 2021 03:19 AM
Last Updated : 29 Sep 2021 03:19 AM

ஆப்கன் மாகாணத்தில் ஷேவிங், ட்ரிம்மிங் செய்ய சலூன் கடைகளுக்கு தலிபான் அரசு தடை :

காபூல்

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை மழிக்கவோ அல்லது ட்ரிம் செய்யவோ கூடாது என சலூன் கடைக்காரர்களுக்கு அங்குள்ள தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். 1996 முதல் 2001 வரையிலான முந்தைய ஆட்சியில் தலிபான்கள் ஷரியத் சட்டத்துக்கான கடுமையான விளக்கத்தை கடைப்பிடித்தனர். இந்நிலையில் இம்முறை அவர்களின் ஆட்சி எவ்வாறு இருக்கும் என உலகம் கவனித்து வருகிறது.

மேற்கு ஆப்கானிஸ்தான், ஹெராத் நகரில் கடந்த சனிக்கிழமை ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் 4 பேரை கொன்ற தலிபான்கள் அவர்களின் உடலை பொது இடத்தில் தொங்கவிட்டனர்.

இந்நிலையில் ஆப்கனில் தெற்கில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை மழிக்கவோ அல்லது ட்ரிம் செய்யவோ கூடாது என சலூன் கடைக்காரர்களுக்கு மாகாண அரசின் களங்கம் மற்றும் நல்லொழுக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சலூன் கடைக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறிப்பில், யாராவது இந்த உத்தரவை மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

ஆப்கனில் தலிபான்களின் முந்தைய ஆட்சியில் ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும் என்று பழமைவாத இஸ்லாமியர்கள் வலியுறுத்தினர். ஆனால் 2001-ல் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு ஆண்கள் தாடியை மழித்துக் கொள்வதும் ட்ரிம் செய்து கொள்வதும் அங்கு பிரபலமாகிவிட்டது.

இந்நிலையில் தலிபான்களின் இந்த உத்தரவு குறித்து லஷ்கர் கா பகுதியை சேர்ந்த பிலால் அகமது என்பவர் கூறும்போது, “இந்த உத்தரவை கேட்டதும் எனது மனம் உடைந்துவிட்டது. இந்த நகரில் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய வாழ்க்கையை பின்பற்றுகின்றனர். எனவே அவர்கள் விரும்பியதைச் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றார்.

ஷெர் அஃப்சல் என்ற சலூன் கடைக்காரர் கூறும்போது, “முடி திருத்தம் செய்துகொள்ளும் ஒருவர் மீண்டும் எங்கள் கடைக்குவர 40 முதல் 45 நாட்கள் வரை ஆகும். இந்த உத்தரவு எங்கள் தொழிலை மிகவும் பாதிக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x