Published : 26 Sep 2021 03:24 AM
Last Updated : 26 Sep 2021 03:24 AM
ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று குவாட் மாநாட்டில் இந்தியாவும் அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தலிபான் அரசு பதவியேற்றிருப்பதால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தீவிரவாத குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கும். அங்கிருந்து உலகம் முழுவதும் போதை பொருட்கள் கடத்தல் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து பைடனும் மோடியும் ஆலோசித்தனர்.
குவாட் மாநாடு
இந்திய, பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த கூட்டமைப்பின் மாநாடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வாஷிங்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே சுகா பங்கேற்றனர்.
கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "இந்திய, பசிபிக் பிராந்தியம் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்திலும் அமைதியை நிலைநாட்ட குவாட் அமைப்பு உறுதி பூண்டுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியின்போது குவாட் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டன. தற்போது கரோனா பெருந்தொற்று காலத்திலும் 4 நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்த் வர்தன் ஷிரிங்லா பேசும்போது, " ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்துக்கு பயன்படுத்தக்கூடாது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, "இந்தியாவில் வெகு விரைவில் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும். இதன்மூலம் உலகளாவிய கரோனா தடுப்பூசி தேவை பூர்த்தி செய்யப்படும். ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்துக்கு பயன்படுத்த மாட்டோம் என்று தலிபான்கள் உறுதி அளித்துள்ளனர். இந்த வாக்குறுதியை தலிபான்கள் காப்பாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார். சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து குவாட் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT