Published : 22 Sep 2021 03:03 AM
Last Updated : 22 Sep 2021 03:03 AM

மடாதிபதி மர்ம மரணம் தொடர்பாக சீடர் கைது - தவறு செய்தவர்கள் தப்ப முடியாது : உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி

நரேந்திர கிரி

லக்னோ

உத்தரபிரதேச மடாதிபதி மர்ம மரணம் தொடர்பாக அவரது சீடர் கைது செய்யப்பட்டுள்ளார். தவறு செய்தவர்கள் தப்ப முடியாது என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உ.பி.யின் அயோத்தி நகரை தலைமையிடமாகக் கொண்டு அகில பாரதிய அகாடா பரிஷத் செயல்படுகிறது. பழமையான இந்த ஆன்மிக அமைப்பில் ராமஜென்ம பூமி வழக்கில் தொடர்புடைய நிர்மோகி அகாடா உட்பட13 மடங்கள் இடம்பெற்றுள்ளன. நிரஞ்சனி அகாடாவின் செயலாளர்நரேந்திர கிரி (62) கடந்த 2014-ல்அகில பாரதிய அகாடா பரிஷத்தின்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட் டார். கடந்த 2019-ம் ஆண்டில் அவர் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ள பாகம்பரி மடத்தின் மடாதிபதியாக நரேந்திர கிரி உள்ளார். இந்த மடம் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. அயோத்தி ராமர் கோயில் வழக்கு மற்றும் கோயில் கட்ட நிதி திரட்டியதில் நரேந்திர கிரி முக்கிய பங்காற்றினார். பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

இந்த சூழலில் பிரயாக்ராஜ் நகரின் பாகம்பரி மடத்தில் மடாதிபதி நரேந்திர கிரி நேற்று முன்தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது அறையில் இருந்து 7 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டது.

நரேந்திர கிரி மரணத்தில் மர்மம் இருப்பதால், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு சாதுக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, நரேந்திர கிரி மரணம் தொடர்பாக அவரது சீடர் ஆனந்த் கிரி ஹரித்வாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.

முதல்வர் யோகி ஆதித்ய நாத், பாகம்பரி மடத்துக்கு நேரில் சென்று ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அவர் கூறும்போது, "ஏராளமான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x