Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.8,500 கோடி லஞ்சமா? - அமேசான் குற்றச்சாட்டை விசாரிக்க உத்தரவு :

புதுடெல்லி

இந்திய அரசு அதிகாரிகளுக்கு அமேசான் நிறுவனம் ரூ.8,500 கோடி லஞ்சம் அளித்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஒருபோதும் லஞ்சத்தைஅனுமதித்தது கிடையாது. அந்த வகையில் லஞ்சமற்ற நிர்வாகத்தை அளிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.

இதன்படி அமேசான் லஞ்சம் அளித்ததாக கூறப்படும் புகார் குறித்து அந்நிறுவன சட்டப் பிரதிநிதிகளிடம் விசாரணை நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

அமேசான் நிறுவனம் லஞ்சம்அளித்தது தொடர்பான புகார்அமெரிக்காவின் ``தி மார்னிங்கான்டெக்ஸ்ட்'' என்ற இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தின் சட்டப் பிரிவு அதிகாரிகளிடம் விசாரணையை அமேசான் மேற்கொண்டுள்ளதாகவும், நிறுவன விவகார சட்ட ஆலோசகர் விடுமுறையில் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு தனிப்பட்ட வழக்கறிஞரை நியமித்து அவர் மூலம் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசைப் பொறுத்தவரையில் அரசு நிர்வாகத்தில் லஞ்சமற்ற செயல்பாடு உள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக அரசு நிலையில் லஞ்சப்புகார் எந்த வகையில் இருந்தாலும் அது குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு ஆண்டுகளில் சட்ட செலவாக ரூ.8,500 கோடி செலவிட்டதாக அமேசான் தெரிவித்துள்ளது. இந்தப் பணம் முழுவதும் எங்கு சென்றது என்பது குறித்து ஆராய வேண்டும். இந்தப் பணம்முழுவதும் லஞ்சமாக அளிக்கப்பட்டிருந்தால் அவர்கள் மிகவும்நேர்மையான வணிக நடை முறையைப் பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டிய அரசு அதிகாரிகள், விதிமீறிய செயலில் ஈடுபட்டவர்களை அமேசான் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

குற்றச்சாட்டுகளை மறுக்கவோ அல்லது அதை ஏற்கவோ செய்யாத அமேசான் நிர்வாகம், தங்கள் நிறுவனம் ஒருபோதும் லஞ்சத்தை ஊக்குவித்தது கிடையாது என தெரிவித்துள்ளது. இப்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் இது குறித்து கருத்து தெரிவிப்பது இப்போது இயலாது என்று அமேசான் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலை அகில இந்திய வர்த்தகர் சம்மேளனம் (சிஏஐடி) வலியுறுத்தியுள்ளது. இது அரசின் செயல்பாடுகள் மீதான நம்பகத்தன்மையை சிதைக்கும் குற்றச்சாட்டு என்றும் இதை விசாரிப்பதன் மூலம் அனைத்து நிலைகளிலும் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்று சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இதில் சம்பந்தப்பட்ட பெயர்களை வெளியிடுவதோடு அவர்களை தண்டிக்க வேண்டும் என்று சம்மேளனத்தின் தலைவர் பிரவீண்கண்டேல்வால் வலியுறுத்தி யுள்ளார்.

அமேசான் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏற்கெனவே போட்டி ஒழுங்குமுறை ஆணையம்கண்காணித்து வருவது குறிப் பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x