Published : 21 Sep 2021 03:18 AM
Last Updated : 21 Sep 2021 03:18 AM
ரஷ்யாவிலுள்ள ஒரு பல்கலைக் கழகத்துக்கு வந்த மாணவர் ஒருவர், அங்குள்ளவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
மத்திய ரஷ்யப் பகுதியில் அமைந்துள்ளது பெர்ம் ஸ்டேட் பல்கலைக்கழகம். இதன் வளாகத்துக்குள் நேற்று கருப்பு உடையணிந்த மாணவர் ஒருவர் நுழைந்துள்ளார். அவரது கையில் துப்பாக்கி இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த மாணவர்களை நோக்கி அந்த மாணவர் கண்மூடித்தனமாக சுட்டார். இந்த சம்பவத்தில் 8 மாணவர்கள் இறந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
பின்னர் அந்த மாணவரை போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது ரஷ்யாவில் இதுபோன்று பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது மிகமிகக் குறைவு ஆகும். ரஷ்யாவில்பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களில் கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகமாக இருக்கும். இதனால் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது அரிதான விஷயமாக இருக்கும்.
கடைசியாக கடந்த 2019-ம்ஆண்டு மே மாதம் கிழக்கு ரஷ்யாவில் ஒரு கல்லூரியில் 19 வயது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக மாணவர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவரும் தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பிறகு தற்போதுதான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் வித்தியாசமான உடையுடன், தலையில் கவசத்துடன், கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையும் காட்சிகள் பல்கலைக்கழக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும், இளைஞருக்குப் பயந்து ஜன்னல்கள் வழியாக மாணவர்கள் கீழேகுதிக்கும் காட்சியும், பொருட்களை வீசி அடிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இந்தியர்களுக்கு பாதிப்பில்லை
இதனிடையே பெர்ம் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர் என்று ரஷ்யாவிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பெர்ம் ஸ்டேட் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தசம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். இறந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். பல்கலைக்கழக அதிகாரிகளுடனும், இந்தியமாணவர்களின் பிரதிநிதிகளுடனும் இந்தியத் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. எந்த ஒரு இந்திய மாணவருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT