Published : 21 Jul 2021 03:14 AM
Last Updated : 21 Jul 2021 03:14 AM
கேரளத்தின் எர்ணாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா(54). இவர் கொச்சின் மாநகராட்சிக்கு சொந்தமான கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இதனிடையே, கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் வந்துவிட அவரால் கடையைத் திறந்து தொழில் செய்ய முடியவில்லை.
இந்நிலையில், அவருக்கு ரூ.9 லட்சம் வாடகை பாக்கி இருப்பதாக கூறி, கொச்சி மாநகர வளர்ச்சிக் கழக அதிகாரிகள் அவரது கடைக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர். இதனால் வாழ்வாதாரம் இழந்த பிரசன்னா, பூட்டிக் கிடக்கும் தன் கடையின் முன்பு போராட்டம் நடத்தி வந்தார். கணவர் இல்லாமல் தனித்துவாழும் பிரசன்னா, மாற்றுத்திறனாளியான தன் மகளையும் சேர்த்து தன் நெருக்கடியான பொருளாதார சூழலிலும் கவனித்து வருகிறார்.
கரோனா சூழலால் தன்னால் மாதம் ரூ.13,800வாடகை செலுத்த முடியவில்லை எனவும், தனது கடையைத் திறந்து தொழில் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், இதுதொடர்பான செய்தியை ஊடகங்களின் வாயிலாக அறித்த கேரளத்தில் பிரசித்திபெற்ற லூலூ குழுமத்தின் தலைவர் யூசுப் அலி, பிரசன்னாவுக்கு உதவியுள்ளார்.
இதுகுறித்து தகவல் தெரிந்ததும், தனது கொச்சின் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களைத் தொடர்புகொண்ட யூசுப் அலி, பிரசன்னாவுக்கு உடனடியாக மாநகராட்சிக்கு செலுத்தும் வகையில் ரூ. 9 லட்சத்தை வழங்க அறிவுறுத்தினார். அதன்படி, யூசுப் அலி நடத்திவரும் லூலூ மார்டின் பணியாளர்கள், பிரசன்னாவை நேரில் சந்தித்து அந்தத் தொகையை வழங்கினார்கள். தொடர்ந்து கூடுதலாக ரூ.2 லட்சத்தை பிரசன்னா நடத்திவரும் பழரசக் கடைக்கான தளவாடப் பொருள்கள் வாங்குவதற்காக வழங்க அவர் ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனார்.
இதுகுறித்து பிரசன்னா இந்துதமிழிடம் கூறும்போது, “ரூ.9 ஆயிரத்திற்கே வழியில்லாமல் தவிக்கும் என்னிடம் ரூ.9 லட்சம் வாடகை பாக்கி இருப்பதாக கடிதம் கொடுத்தபோது தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனத் தோன்றியது. யூசுப் அலியை கடவுளே எனக்காக அனுப்பியது போல் உள்ளது. காலம் முழுவதும் அவருக்காக இறைவனிடம் பிரார்த்திப்பேன்’’என உருக்கமாகத் தெரிவித்தார்.
முதல்முறை அல்ல...
லூலூ மார்ட் எளிய மக்களுக்கு உதவி செய்வது இது முதல்முறை அல்ல. துபாய் நாட்டில் உயிர் இழப்பு ஏற்படுத்தியதற்காக மரண தண்டனை பெற்றவர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டவரின் குடும்பத்தினர் மன்னிப்பு கொடுத்தால் விடுவிக்கப்படுவார்கள். அதேநேரம், இறந்தவர் உயிரோடு இருந்தால் அந்த குடும்பப் பொருளாதாரத்திற்கு எப்படி உதவியிருப்பாரோ அதற்கு இணையானத் தொகையை இழப்பீடாக சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என சட்டம் உள்ளது. திருச்சூரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் துபாயில் வசித்து வந்தார். அவர் காரை ஒரு சிறுவனின் மீது தவறுதலாக மோதிவிட்டார். இதில் அந்த சிறுவன் உயிர் இழந்தார். இதனால் கைது செய்யப்பட்ட கிருஷ்ணனுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.
2012 -ம் ஆண்டு முதலே இதற்காக கிருஷ்ணன் சிறையில் இருந்துவந்தார். இந்நிலையில், இதுகுறித்து தெரியவந்ததும் யூசுப் அலி, சிறுவனின் மரணத்திற்கு இழப்பீடாக ரூ.1 கோடியை தன் சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணனுக்காக, உயிர் இழந்த சிறுவனின் குடும்பம் மன்னிப்பு கடிதம் கொடுக்க, அவர் அண்மையில் விடுதலையாகி கேரளம் திரும்பினார். அப்போதே லூலூ மாலின் தலைவர் யூசுப் அலியின் செயல்பாடு பெரும் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT