Published : 25 Apr 2021 06:09 AM
Last Updated : 25 Apr 2021 06:09 AM

அம்மா, அண்ணா, காப்பாத்துங்க... :

நாட்டுப்புறத் தெய்வங்களின் தோற்றக் கதைகளைத் தேடிச் செல்லும்போது நாம் சந்திக்கும் ஒரு பிரச்சினை, ஒரே சாமிக்கு வேறு வேறு தோற்றக் கதைகளை ஒரே ஊரைச் சேர்ந்தவர்களே சொல்வார்கள். ஒரே தோற்றக் கதை கொண்ட சாமிகள் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களிலும் இருக்கும். சின்ன சின்ன மாறுபாடுகள் மட்டும் கதையில் இருக்கும். வாய்வழியாகச் சொல்லப்பட்டு வருவதால் சொல்பவரின் சார்பும் கற்பனையும் அதில் கலப்பதைத் தவிர்க்க முடியாது. அல்லது உண்மையிலேயே ஒரே மாதிரி சம்பவம் வெவ்வேறு ஊர்களில் நடந்திருக்கலாம்.

வெவ்வேறு காரணங்களுக்காகத் தீக்குளித்து இறந்த பெண்களுக்கெல்லாம் காலப்போக்கில் ‘தீப்பாஞ்ச நாச்சியாரம்மன்’ என்று பேர் வருவது ஓர் உதாரணம். அப்படியொரு கதை வெள்ளையம்மாள் கதையாகவும் கம்பங்குழியம்மன் கதையாகவும் தேனி, திண்டுக்கல் வட்டாரத்தில் உலவுகிறது.

மகளைக் கொன்ற குடும்பம்

தேனி ஒன்றியம் தப்புக்குண்டுப் பகுதியில் வாழ்ந்துவந்த கவுண்டர் இன மக்கள் சிறுபான்மை அளவிலும் பட்டாணி இஸ்லாமியர் பெரும்பான்மையாக ஒரு கட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இன்று அங்கே இஸ்லாமியர் வீடே இல்லை. வசதி வாய்ப்புள்ள பட்டாணி இஸ்லாமியர் ஒருவர் கவுண்டர் ஒருவர் வீட்டுக்கு வந்து, “உங்கள் வீட்டில் எனக்குப் பெண் தர வேண்டும்” என்று கேட்க, பயத்தில் அந்த வீட்டாரும் சரி என்று சொல்லிவிட்டார்களாம். சொன்னபடிக்கு நிச்சயம் செய்துதர எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்தாலும், குடும்பத்தாருக்குத் தங்கள் மகளை மணம் முடித்துக் கொடுக்க விருப்பமில்லை. மகள் வெள்ளையம்மாள் கையில் ஒரு விளக்கைக் கொடுத்துக் கம்பு தானியம் கொட்டி வைத்திருக்கும் கம்பங்குழிக்குள் இறங்கச் சொல்லியிருக்கிறார்கள். என்ன ஏதென்று புரியாத அந்தப் பெண் உள்ளே இறங்கியதும் கம்பங்குழியை அவசரமாக மூடிவிட்டார்கள். இரவோடு இரவாகக் குடும்பமே ஊரைக் காலி செய்து ஓடிவிட்டார்கள். அவர்கள் தப்பிப் போகும் வழியில் ஒரு பெரிய ஆறு குறுக்கிட்டதாம். அப்போது அக்குடும்பத்தினர் தம் மகளை மனத்தில் நினைத்து, “நாங்கள் செய்தது சரி என்றால் நீதான் எங்களுக்கு வழி உண்டாக்கித் தர வேண்டும்” என்று வேண்டி வணங்க, ஆற்றங்கரையில் இருந்த பெரிய மருத மரம் சாய்ந்து குறுக்கே விழுந்தது. அந்த மரத்தின் மேல் ஏறி அக்கரைக்குச் சென்று தப்பினர். மீண்டும் மரம் எழுந்து நின்றுகொண்டதாம். விரட்டி வந்த பட்டாணியர் வெள்ளம் அடித்துப்போய்விட்டதாகக் கருதித் திரும்பி விட்டார்களாம். தங்கள் குலம் காத்த மகளைப் பின்னர் தெய்வமாகக் கும்பிட ஆரம்பித்தனர்.

(கதை சொன்னவர்: பாரத மணி, தப்புக்குண்டு. சேகரித்தவர்: மு.சித்ரா.)

இதே போன்ற கதையுடன் திண்டுக்கல் வட்டாரத்தில் கம்பங்குழி அம்மன் வழிபடப்படுகி றாள். அதில் தச்சு வேலை செய்யும் ஆசாரி வீட்டுப் பெண் குளித்துவிட்டு மொட்டை மாடியில் நின்று தலையை உலர்த்திக்கொண்டி ருந்திருக்கிறாள். அதில் ஒரு நீளமான முடி பறந்து, அந்த வழியாகக் குதிரையில் சென்ற ராஜாவின் முகத்தில் படர, அவர் அண்ணாந்து பார்த்து இவ்வளவு அழகான பெண்ணாக இருக்கிறாளே என்று உடனே அவள் மேல் ஆசை கொண்டுவிட்டார். ராஜா அல்லவா?

அந்தக் குடும்பம் 64 விளக்குகள் செய்து அரண்மனைக்குக் கொடுத்தனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார். அந்த விளக்குகளை அந்தக் கன்னிப்பெண்ணே அரண்மனைக்குக் கொண்டு வர வேண்டும் என்று நிபந்தனையையும் இட்டார். அரசருடைய உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட குடும்பத்தார், அவள் கையில் ஒரு விளக்கைக் கொடுத்துக் கம்பங்குழிக்குள் இறங்கச் சொன்னார்கள். அவள் இறங்கியதும் அவர்கள் மேல் பலகையை மூட, கம்புக்குள் இறங்கி அவளுக்கு மூச்சு முட்ட, “அம்மா… அண்ணா… காப்பாத்துங்க…” என்று கதறியபடியே அவள் மாண்டுபோனாள். பின்னர் அவர்கள் ஊர்விட்டு ஊர் வந்து ‘கம்பங்குழி அம்மன்’ என அவளை வழிபடத் தொடங்கினர்.

(விருதுநகர் மாவட்ட அறிவொளி இயக்கம் வெளியிட்ட ‘அம்மா… அண்ணா… காப்பாத்துங்க….’ சிறுநூல் தொகுப்பு: மணிமாறன்)

போர்களுக்குக் காரணமான ஆசை

அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்கள்மீது இச்சை கொள்வதும், அவர்களிடமிருந்து தப்ப முடியாத எளிய மக்கள் தங்கள் குடும்ப/குல மானத்தைக் காக்கத் தங்கள் பெண்களையே பலி கொடுப்பதும் காலந்தோறும் நடந்துவருவதுதான். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை போன்றவை காரணமாகத்தானே போர்களே நடந்ததாகப் படிக்கிறோம். மாலிக் காபூர் படையெடுத்து வந்த காலத்தில் இனக்கலப்பு நடந்த கதையை ‘காவல் கோட்டம்’ நாவலில் சு.வெங்கடேசன் எழுதியிருப்பார். தசரத மன்னனுக்கு அறுபதாயிரம் மனைவியர் என்கிற கதை சற்று அதீதமாக இருந்தாலும் மன்னர்கள் அந்தப்புரத்தில் ஏராளமான பெண்களை வைத்து வாழ்ந்தார்கள் என்கிற உண்மை மறுக்க முடியாதது. அறுபதாயிரமோ அறுபதோ அல்லது ஆறோ. அந்த ஆறு பெண்கள் யார் வீட்டுப் பெண்கள்?

குளித்து விட்டுத் தலையை உலர்த்தும்போது அவள் கேசம் ஆணின் காமப் பார்வைக்குள் சிக்கும் காட்சி திரும்பத் திரும்ப நம் கதைகளிலும், புராண இதிகாசங்களிலும், சொல்கதைகளிலும், நவீன நாவல்களிலும் வந்துகொண்டே இருக்கிறது. நிம்மதியாக அவள் தலையை உலர்த்தக்கூட நம் சமூகம் அனுமதித்ததில்லை என்கிற ஒரு வரி சிவன் முதுகில் விழுந்த சாட்டையடியாக நம் முதுகில் விழுகிறது.

உள்ளத்தை நடுங்கவைக்கும் கதறல்

இக்கதைகளில் பொதிந்திருக்கும் ஆணாதிக்க/அதிகார அரசியல் ஒரு பக்கம் இருக்க, பெற்றவர்கள், உடன் பிறந்தவர்களின் வார்த்தைகளை நம்பிக் குழிக்குள் இறங்கினாளே அந்தக் காட்சியை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. வேறு மாற்றுகளை அக்குடும்பம் ஏன் யோசிக்கவில்லை, தப்பி ஓடும்போது அவளையும் அழைத்துக்கொண்டு ஓடியிருக்கலாமே? வழியில் பிடிபட்டால் நாம் செத்தாலும் பரவாயில்லை நம் பெண்ணின் மானம் போய்விடக் கூடாது என்கிற எண்ணமே முன்னுக்கு வந்து நின்றிருக்கிறது. ஏனெனில், அது அந்தப் பெண்ணின் மானம் அல்ல, குடும்பத்தின் மானம் அல்லவா? அவள் உடம்பின் மீது குடும்பத்தின் மானம், சாதியின் மானம், மதத்தின் மானம், இனத்தின் மானம், நாட்டின் மானம் என்று எத்தனை இழவுகளை நாம் ஏற்றிவைத்திருக்கிறோம்? இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போதும் ஆக்கிரமிப்புக் காலங்களிலும் பெற்ற பெண்களைத் தகப்பன்மாரும் அண்ணனும் தம்பியும் வெட்டிக் கொன்ற எவ்வளவு கதைகளை நாம் பார்த்துவிட்டோம்.

ஏற்றப்பட்ட மானச் சுமைகளை அவள் இறக்கிவைக்கும் காலம் எப்போது வரும்? எச்சுமையும் இல்லாத அவள் உடலை அவளுடைய வெறும் உடலை மீட்டு அவளுக்கே அவளுக்கெனத் தரும் ‘உடல் மீட்சிப் போரை’ நாம் எப்போதுதான் நடத்தப்போகிறோம்?

‘கம்பங்குழி அம்மன்’ என்கிற தலைப்பில்தான் அறிவொளி இயக்கத்தில் புத்தகம் வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். எங்களை வழிநடத்திய, பேராசிரியர் ச.மாடசாமிதான் “இல்லை. ‘அம்மா… அண்ணா… காப்பாத்துங்க….’ என்கிற கதறல்தான் கதையை வாசிக்கையில் நம் செவிகளிலும் உள்ளத்திலும் ஓங்கி அறைவதாக இருக்கிறது. அதையே தலைப்பாக வைப்போம்” என்றார். உண்மையில் ஒரு பாவமும் அறியா அப்பெண்களின் கதறல்தான் கால வெளியெங்கும் காற்று வெளியெங்கும் நிரம்பித் ததும்பி நம்மை மூச்சுமுட்ட வைக்கிறது.

இப்போது இந்தக் கதையை எடுத்து எழுதுகையில் எனக்கு “அண்ணா… காப்பாத்துங்க…” “அண்ணா… என்னை விட்டுடுங்க… அண்ணா என்னை பெல்ட்டாலே அடிக்காதீங்க…” என்கிற பொள்ளாச்சி கதறல்களாக மாறி மனத்தில் விழுந்து உடல் அதிர்கிறது. உள்ளம் நடுங்குகிறது. உங்களுக்கும்தானே?

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x