Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நடந்தது

புதுடெல்லி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சிக்கலான ஜிஎஸ்டி வரி முறை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தன.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சிக்கல் போன்வற்றை எதிர்த்து அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (சிஏஐடி) நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, பல இடங்களில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரியை நல்லதாக அல்லது எளிமையாக்க வேண்டும். புதிய இ-வே சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு சரக்குகள் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வர்த்தகர் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு அகில இந்திய போக்குவரத்து நலச் சங்கம் மற்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா உட்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தப் போராட்டத்தின் போது, காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வாகனங்களை நிறுத்தி வைத்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிஏஐடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘மிகவும் சிக்கலான ஜிஎஸ்டி.யால் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதை எளிமையாக்க வேண்டும். இதை வலியுறத்தி 8 கோடி வர்த்தகர்கள், ஒரு லட்சம் போக்குவரத்து நலச் சங்கத்தினர் பங்கேற்கின்றனர்’’ என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x