Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM
முறைகேடு புகாரில் சிக்கிய வைர வியாபாரி நீரவ் மோடியை லண்டனில் இருந்து நாடு கடத்துவதற்காக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை சிபிஐயும், அமலாக்கத் துறையும் தாக்கல் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி மோசடி செய்துவிட்டு, 2018-ம் ஆண்டு லண்டனில் தஞ்சமடைந்த குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடு கடத்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் தற்போதுதான் சிபிஐக்கும், அமலாக்கத் துறைக்கும் வெற்றி கிடைத்திருக்கிறது. எனினும், இந்த வெற்றியை பெறுவதற்கு இரண்டு புலனாய்வு அமைப்புகளும் கடுமையான சோதனைகளை கடந்து வந்திருக்கின்றன.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், தனக்கு சாதகமாக வாதாடுவதற்காக அங்குள்ள திறமையான பல வழக்கறிஞர்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து நீரவ் மோடி நியமித்திருந்தார். சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு ஆதாரத்துக்கு எதிராகவும் அந்த வழக்கறிஞர்கள் சட்ட நுணுக்கங்களை கையாண்டு வாதாடினர். மேலும், நீரவ் மோடி விவகாரத்தை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியா மேற்கொள்கிறது என்றும், அங்கு சென்றால் அவரது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் எனவும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, தனது ஜாமீன் உத்தரவாத தொகையாக 4 மில்லியன் பவுன்டுகளை (சுமார் 40 கோடி) வழங்க தயாராக இருப்பதாகவும் நீரவ் மோடி உறுதியளித்தார். இதுபோன்ற காரணங்களால், அவரை நாடு கடத்தும் விவகாரத்தில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டதாக சிபிஐ உயரதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த சூழ்நிலையில்தான், இந்தியாவில் நீரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தையும் சிபிஐயும், அமலாக்கத் துறையும் திரட்ட தொடங்கின. பண மோசடி தொடர்புடையது மட்டுமல்லாமல் ஆதாரங்களை அழிக்க முயன்றது, சாட்சியங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது, குற்றச்சதியில் ஈடுபட்டது என நீரவ் மோடிக்கு எதிராக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்களை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐயும், அமலாக்கத் துறையும் சமர்ப்பித்தன. மேலும், இதுதொடர்பான ஆடியோ ஆதாரங்களும் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டன.
இவை அனைத்தையும் கவனமாக ஆய்வு செய்ததற்கு பிறகே, நீரவ் மோடி செய்த குற்றங்களின் தீவிரத் தன்மையை நீதிபதிகள் உணர்ந்தனர். அதன் பின்னரே, நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என சிபிஐ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.சி. ஜோஷி கூறுகையில், “இந்தியாவில் பெரிய மோசடியில் ஈடுபட்டு பின்னர் வெளிநாடுக்கு சென்றால் தப்பிவிடலாம் என எண்ணுபவர்களுக்கு இந்த வழக்கு சிறந்த பாடமாக இருக்கும். மேலும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், இதுபோன்ற வழக்குகளை சிபிஐ கைவிடாது என்பதையும் இந்த வழக்கு உணர்த்தியுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT