Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM
சமூக வலைதளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய வழிகாட்டு விதிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் சமூக வலைதளங் களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவை மக்களிடையே பெரிதும் பிரபலமாகி வருகின்றன. இதைப்பயன்படுத்துவோரின் பாதுகாப்புஉள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
நிறுவனங்கள் அதைப் பயன்படுத்துவோரின் குறைகளைத் தீர்க்கும் வகையிலான அணுகுமுறையைக் கையாள வேண்டும்.இதற்கென மூன்று அடுக்கு குறைதீர்ப்பு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு அடுக்குகளை அந்த நிறுவனங்களே சுய கட்டுப்பாடு அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும்.
முதலாவது சமூக வலைதளங் களை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் செய்திகளை வெளியிடுவ தற்குரியவையாகும். மூன்றாவது அடுக்கு இதை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கண் காணிப்பதாகும்.
ஓடிடி எனப்படும் தளங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் குறை கேட்பதற்கென முதன்மை அதிகாரி மற்றும் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களாயிருப்பின் உள்நாட்டில் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.
சுய கட்டுப்பாட்டு அமைப் பானது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலோ அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலோ இருக்க வேண்டும். இவர் நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறி மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்.
சமூக வலைதளங்களில் முறை கேடான செய்திகள் பரவும்போது அதை முதலில் பரப்பியவர் பற்றிய தகவலை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வித தகவலானது இந்திய இறையாண்மையை பாதிப்பதாகவோ, மாநிலத்தின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாகவோ, பொது ஒழங்கிற்கு கேடுவிளைவிக்கும் வகையில் இருந்தோலோ, வெளியுறவுக் கொள்கைக்கு புறம்பானதாக இருந்தாலோ, பாலியல் வன் கொடுமை பற்றியதாகவோ அல்லது பாலியல்சார்ந்த கருத்துகளை உள்ளடக்கியதாவோ இருந்தால் அது பற்றிய தகவலைத் தெரிவிக்க வேண்டும்.
சமூக வலைதளங்கள் இருவகைகளில் செயல்படுவதாக இருக்க வேண்டும். இது குறித்த பகுப்பாய்வை மத்திய அரசு விரைவில் வெளியிடும். இந்த நிறுவனங்கள் குறைதீர்ப்பு வசதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறைதீர்ப்பு அதிகாரி 24 மணி நேரத்திற்குள் தன்னிடம் வரும் புகாருக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். அல்லது பிரச்சினைக்கு 15 நாட்களுக்குள் உறுதியான தீர்வை எட்டியிருக்க வேண்டும்.
ஓடிடி தளங்களைப் பொறுத்தமட்டில் அவை வயது அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. யு (யுனிவர்சல்), யு/ஏ 7 , யு/ஏ13 , யு/ஏ 16 மற்றும் வயது வந்தோருக்கானது என வகைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த தளங்கள் அனைத்தும் பெற்றோர் கட்டுப்பாட்டு வசதிகொண்டவையாக இருக்க வேண்டும். வயது வந்தவர்களுக்கான திரைப்படங்கள், காட்சிகளைப் பார்க்கும்போது அதற்குரிய பரிசீலனை செய்யப்பட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட தளங்களைப் பார்ப்பதற்கான அனுமதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்படும்போது அதற்குரிய விளக்கத்தை நிறுவனங்கள் பயனாளிகளுக்கு அளிக்க வேண்டும். இத்தகைய வழிமுறைகளை சமூக வலைதளங்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT