Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அக்சர் படேல், அஸ்வின் ஆகியோரின் அபார பந்து வீச்சால் 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்ததுள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களும் இங்கிலாந்து அணி 134 ரன்களும் எடுத்தன. 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 482 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 19 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோ ரூட் 2, டான் லாரன்ஸ் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 54.2 ஓவர்களில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
டான் லாரன்ஸ் 26, பென் ஸ்டோக்ஸ் 8, போப் 12, பென் ஃபோக்ஸ் 2, கேப்டன் ஜோ ரூட் 33, ஆலி ஸ்டோன் 0 ரன்களில் நடையை கட்டினர். அதிரடியாக விளையாடிய மொயி ன் அலி 43 ரன்கள் சேர்த்து கடைசி விக்கெட்டாக வெளியேறினார். இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 5, அஸ்வின் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தது.
ஆட்ட நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வானார். இந்த வெற்றியின் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி 69.7 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது. இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 24-ம் தேதி அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக தொடங்குகிறது.
ஐஎஸ்எல் கால்பந்துஇன்றைய போட்டிகோவா – ஒடிசா
நேரம்: இரவு 7.30
இடம்: கோவாநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT