Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM
கரோனா பொதுமுடக்க காலத்தில் நடிகர் சோனூ சூட் செய்த மனிதாபிமான உதவிகளால் நெகிழ்ந்து போன தெலங்கானா கிராம மக்கள் அவருக்கு சிலை வைத்து வழிபடுகின்றனர்.
கரோனா பொதுமுடக்க காலத்தில் வெளிமாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக செய்து கொடுத்தார். பேருந்து வசதி மட்டுமின்றி பலரை தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம், சித்திப்பேட்டை மாவட்டம், செலிமி தாண்டா பகுதியை சேர்ந்த ராஜேஷ் ராத்தோட் என்பவர் சோனு சூட் செய்த உதவிகளால் நெகிழ்ந்து போனார். இதையடுத்து தனது சொந்த செலவில் சோனு சூட்டின் சிலை செய்த அவர், அதை தங்கள் பகுதியில் நேற்று முன்தினம் நிறுவினார். பிறகு அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். இதில் அப்பகுதி மக்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதுகுறித்து ராஜேஷ் ராத்தோட் கூறும்போது, “நடிகர் சோனு சூட் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் கதாநாயகனாக உள்ளார். அறிமுகமில்லாத பலருக்கு அவர் உதவிகளை செய்துள்ளார். தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அவரதுநல்ல உள்ளத்தை கண்டு அவருக்குகோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. இதனால் அவருக்கு சிலை வைத்து வழிபடுகிறோம்” என்றார்.
இந்த தகவலை அறிந்த சோனூ சூட், “இதற்கு நான் தகுதியானவன் அல்ல” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT