Last Updated : 24 Sep, 2021 03:23 AM

 

Published : 24 Sep 2021 03:23 AM
Last Updated : 24 Sep 2021 03:23 AM

புதுவையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு கட்சிகள் ஆயத்தம் : ஆளும் கட்சி - எதிர் தரப்பு தீவிரமாக களமிறங்க முடிவு

புதுச்சேரி

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர் தரப்பில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தீவிரமாக களமிறங்க ஆயத்தமாகி வருகின்றன.

புதுச்சேரியில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு 2006ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் 2011 வரை பதவியில் இருந்தனர். இந்த காலகட்டத்தில், ‘உள்ளாட்சி பிரதிநிதிகளுக்குரிய அதிகாரத்தை அரசு தரவில்லை’ என உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து புகார் செய்து வந்தன. ‘உள்ளாட்சி அமைப்புகளை சுதந்திரமாக செயல்படவிடவில்லை’ என குற்றம்சாட்டி வந்தனர். அதன்பிறகு பல காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.

உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்த சூழ்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதிகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக இத்தேர்தல் நடைபெறுகின்றன.

ஆளும் மற்றும் எதிர் தரப்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்த கூட்டணியை இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்வது உறுதியாகியுள்ளது. இட பங்கீட்டில் தங்கள் பலத்தை தக்க வைக்க அனைத்து கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. ஆளுங்கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் ‘தனித்தனியே களம் கண்டு நம் பலத்தை இத்தேர்தலில் காட்டலாம்’ என்று கட்சி உள்கூட்டங்களில் பேசினாலும், இரு தரப்பிலும் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட வேண்டிய சூழல் நிலவுகிறது .

ஆளும்கட்சியான என்ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக தரப்பில் கூட்டணி தொடரும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் எதிர்கட்சியான திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கூட்டணி தொடரும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து 5 மாதங்களே ஆன நிலையில், அடுத்து உள்ளாட்சித்தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழல் கட்சிகளுக்கு உருவாகியிருப்பது ஒருவித நெருக்கடியான நிலை என்றே அனைத்து கட்சிகளும் கருதுகின்றன. அதே நேரத்தில், கடந்த காலங்களிலும் அதிருப்தியில் இருந்தவர்களை சரிகட்ட இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் திட்டமிட்டு, அதற்கான பட்டியலைத் தயார் செய்து வருகிறது. முக்கியப் பிரமுகர்களும் தங்களுக்கான சீட்களை பெற காய் நகர்த்த தொடங்கி விட்டனர்.

ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகித்தோர் இத்தேர்தல் அறிவிப்பு தொடர்பாக கூறுகையில், "சிறிய ஊரான புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தால், தங்கள் அதிகாரம் பறிபோகும் என்று நினைத்தே எம்எல்ஏக்கள் பலரும் செயல்படுகின்றனர். சட்டப்பேரவையிலும் சில எம்எல்ஏக்கள் உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராகவே கருத்து தெரிவித்தனர். குறிப்பாக தேர்தலில் தொகுதி வரையறை சரியாக செய்யவில்லை - வார்டுகளுக்கு இடஒதுக்கீடு செய்ததிலும் குளறுபடி உள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

கடந்த காலத்தை போல தேர்தலுக்கு முட்டுக்கட்டை ஏற்படும் வகையில் யாராவது நீதிமன்றத்தை நாடுவார்கள் என்றே பலரும் காத்திருந்த சூழலில், தற்போது தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இத்தேர்தலால் பெண்களும், சாதாரண மக்களும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்கள் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்" என்று தெரிவிக்கின்றனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான அடிப்படை பணிகளில் கூட பல அரசியல் கட்சிகள் ஈடுபடாமல் இருந்த நிலையில், இந்தத் தேர்தல் அறிவிப்பு அவர்களை விரைவாக செயல்படத் தூண்டியிருக்கிறது. எனவே அடுத்தடுத்த நாட்களில் புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.

.................

பெட்டிச் செய்தி

பணப் பட்டுவாடாவை தடுப்பார்களா?

பணம், பரிசுப் பொருட்கள் விநியோகிமின்றி இத்தேர்தல் நடைபெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

இத்தேர்தல் தொடர்பாக உள்ளாட்சி கூட்டமைப்பு தலைவர் ஜெகன்நாதன் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடக்க தேர்தல் ஆணையம் மாநில அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். பணம், பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதை உறுதியாக தடை செய்ய வேண்டும். மக்களுக்கு அதிகாரம், ஜனநாயக பரவலாக்கம் வழங்கக்கூடிய உள்ளாட்சித் தேர்தலை மக்கள் சரியான வகையில் பயன்படுத்த தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுப்பது அவசியம்" என்று குறிப்பிட்டார்.

.........................

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x