Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு விரைவில் முடிவெடுக்க வலியுறுத்தல்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி நேற்று சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை குறித்து வலியுறுத்தினார். அருகில் அமைச்சர் டி.ஜெயக்குமார்.

சென்னை

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விரைவாக விடுதலை செய்வது குறித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உள்ளனர்.

இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அமைச்சரவை கூடி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை கேட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முடிவு எடுக்காமல் உள்ளார்.

இதனிடையே, தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு கடந்த ஜன.21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு உறுதியளித்தது. இதை மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் உறுதி செய்தார். இதையடுத்து, பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் வி.பாட்டீல், டெல்லியில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை நேற்று சந்தித்து இது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று மாலை நடந்தது. இதில், 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரை சந்தித்து வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கூட்டம் முடிந்ததும் முதல்வர் பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தலைமைச் செயலர் கே.சண்முகம், முதல்வரின் செயலர் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ராஜ்பவனில் சந்தித்து பேசினர்.

சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஏற்கெனவே தமிழகசட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இன்று ஆளுநரை சந்தித்த முதல்வர், 7 பேர் விடுதலை குறித்து உடனடியாக நல்ல முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இது தொடர்பான பரிந்துரை கடிதமும் தரப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x