Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM

67 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க மத்திய அரசிடம் டாடா குழுமம் விண்ணப்பம்

புதுடெல்லி / மும்பை

உப்பு முதல் சாப்ட்வேர் வரை அனைத்துத் துறைகளிலும் ஈடுபட்டுள்ள இந்தியாவின் பாரம்பரியமிக்க தொழில் நிறுவனமான டாடா குழுமம், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளது. இதற்காக தனது விருப்ப கடிதத்தை மத்திய அரசின் பங்கு விலக்கல் துறைக்கு அனுப்பி உள்ளது.

ஏர் ஏசியா நிறுவனம் மூலமாக இந்த விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. ஏர் ஏசியா நிறுவனத்தில் டாடா நிறுவனத்துக்கு கணிசமான பங்குகள் உள்ளது. தவிர ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 200 ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நிறுவனத்தை வாங்க முடிவு செய்து விண்ணப்பித்துள்ளனர். தங்கள் குழுவில் நிறுவன முதலீட்டாளரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிப்பதற்கு திங்கட்கிழமை மாலை 5 மணி வரை கெடு அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைச் சேர்ந்த அஜய் சிங்கும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கருத்து எதையும் வெளியிடவில்லை.

இதற்கு முன்பு ஏர் இந்தியா நிறுவன பங்கு விலக்கல் நடவடிக்கை 2018-ல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட போது அதை வாங்க மிகக் குறைவான நிறுவனங்களே போட்டியிட்டன. இம்முறை அதிக எண்ணிக்கையில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிகிறது. ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்காவிட்டால் அதை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று கடந்த ஆண்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருந்தார். பங்கு விலக்கல் நடவடிக்கை மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்படுகிறது. பங்கு விலக்கல் துறை உரிய நேரத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் தொடங்கப்பட்டது. இது 1946-ல் ஏர் இந்தியா நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1953-ம் ஆண்டு ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது. எனினும் 1977-ம் ஆண்டு வரை ஜேஆர்டி டாடாவே அதன் தலைவராக இருந்தார். 1995-ம் ஆண்டு விமான துறையில் ஈடுபட டாடா நிறுவனம் ஆர்வம் காட்டியது. அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. கடந்த 2001-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டியது. ஆனால் பங்கு விலக்கல் நடவடிக்கையை அரசு கைவிட்டது. 2013-ம் ஆண்டில் டாடா நிறுவனம் ஏர் ஏசியா இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய நிறுவனங்களை மலேசியாவின் ஏர் ஏசியா மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டோடு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x