Published : 17 May 2023 05:17 AM
Last Updated : 17 May 2023 05:17 AM
சென்னை: தொலைத்தொடர்பு பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை உறுதி செய்யும் நோக்கில், மத்திய தொலைத் தொடர்புத்துறை சார்பில், ‘சஞ்சார் சாத்தி’ என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தை மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள, தமிழகம் மற்றும் புதுச்சேரி தொலைத்தொடர்புத் துறை ஆலோசனை அலுவலகத்தில், ஆலோசகர் ஆனந்த் குமார் காணொலி காட்சியில் பங்கேற்றார்.
செல்போன் போன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், அதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்தும், மக்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் தொலைந்து போன செல்போன்களைக் கண்டறியவும், போலி செல்போன்களை அடையாளம் காணவும் உதவும்.
விழாவில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: சில மாநிலங்களில், சோதனை முயற்சியாக சஞ்சார் சாத்திஇணையதளத்தை பயன்படுத்தியதன் மூலம் 40.87 லட்சம் போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு, அதிலிருந்து 36.61 லட்சம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதள சேவையை பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
மத்திய அரசின் தொலைத்தொடர்பு வரைவு மசோதாவில் பயனாளிகளின் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள சேவை, செல்போன் சார்ந்த மோசடிகளைத் தடுக்கவும், செல்போன்களைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டறியவும் உதவும்.
சிஇஐஆர் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை மூலம், தொலைந்து போன அல்லது திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியும்.இந்த இணையதளத்தில் அளிக்கும் தகவல்கள் சரியாக இருந்தால், அடுத்த 24 மணி நேரத்தில் அவற்றை கண்காணித்து மீட்கும் பணியை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT