Published : 02 May 2023 08:21 AM
Last Updated : 02 May 2023 08:21 AM
புதுடெல்லி: தொல்லை தரும் செல்போன் அழைப்புகளை செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கட்டுப்படுத்தும் டிராயின் உத்தரவை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நேற்றுமுதல் அமல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இதனால், தேவையில்லாத தொல்லைதரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான செல்போன் பயனாளர்களுக்கு வணிக ரீதியிலான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் பெரும் தொல்லையாக மாறியுள்ளன. இதையடுத்து, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மோசடி அழைப்புகளை கட்டுப்படுத்துமாறு டிராய் உத்தரவிட்டிருந்தது. இதனை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நேற்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரத் தொடங்கியுள்ளன.
சம்பந்தம் இல்லாத இடங்களிலிருந்து வரும் போலி, விளம்பர அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை ‘‘ஏஐ ஸ்பேம் பில்டர்’’ தானாகவே தடுத்துவிடும் என்று கூறப்படுகிறது.
பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய விதிகளுக்கு இணங்கவும் மற்றும் ஏஐ ஸ்பேம் பில்டர் எனப்படும் செயற்கை நுண்ணறிவு வடிப்பான்களை அறிமுகப்படுத்தவும் ஒப்புக் கொண்டு செயலாக்கத்தில் இறங்கியுள்ளன.
அடையாளத்தை வெளியிடுதல்
10 இலக்க மொபைல் எண்களுக்கான விளம்பர அழைப்புகளை நிறுத்திவிட்டு, அழைப்பாளரின் பெயர் மற்றும் புகைப்படத்தை திரையில் காண்பிக்கும் அழைப்பாளர் ஐடி அம்சத்தை நிறுவுமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களை டிராய் வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து, அழைப்பாளர் ஐடி அம்சத்தை சேர்க்க ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ட்ரூகாலர் செயலியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போலி, விளம்பர அழைப்புகள், குறுஞ்செய்திகளை ‘‘ஏஐ ஸ்பேம் பில்டர்’’ தானாக தடுத்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT