Published : 21 Apr 2023 09:09 AM
Last Updated : 21 Apr 2023 09:09 AM
சென்னை: ட்விட்டரில் ப்ளூ டிக் சந்தா செலுத்தாத பயனர்கள் அந்த அங்கீகாரத்தை இழந்துள்ளனர். இதில் உலக அளவில் மிகவும் பிரபலமாக அறியப்படும் பிரபலங்களும் அடங்கும். இந்தியாவில் விளையாட்டு, சினிமா, அரசியல் என பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பிரபலங்கள் சந்தா செலுத்தாத காரணத்தால் ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்துள்ளனர். அவர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
ப்ளூ டிக் அங்கீகாரத்திற்கு சந்தா கட்டணம் செலுத்தாத ட்விட்டர் கணக்குகளுக்கு கடந்த வாரம் கெடு தேதி நிர்ணயித்திருந்தார் ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்க். ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின்னர் சந்தா செலுத்தப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது சந்தா செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக் அங்கீகாரம் நீக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் வணிக நோக்கில் ப்ளூ டிக் பெற்ற பயனர்களிடம் இருந்து சந்தா வசூலிப்பது. அதன்படி ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற அடையாளத்திற்கான ப்ளூ டிக்கை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
அதற்கு முன்னர், ஊடக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்தது ட்விட்டர். இவர்கள் அனைவரும் சந்தா கட்டணம் செலுத்தாமல் இந்த அம்சத்தை பெற்றுவந்த சூழலில் தற்போது அதற்கான கட்டணத்தை இவர்களும் செலுத்த வேண்டி உள்ளது.
ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்த இந்திய பிரபலங்கள்..
ஷாருக்கான், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், விஜய், ஆலியா பட், சிம்பு, விஜய் சேதுபதி, கார்த்தி, நயன்தாரா உட்பட இந்திய திரை பிரபலங்கள். ரோகித் சர்மா, விராட் கோலி என இந்திய விளையாட்டு பிரபலங்கள். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ட்விட்டர் தளத்தில் ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பிரபலமாக அறியப்படும் பாப் நட்சத்திரம் பியோனஸ், போப் பிரான்சிஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ரியாலிட்டி டிவி பிரபலம் கிம் கர்தாஷியன் ஆகியோர் ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்துள்ளனர். ட்விட்டர் நிறுவனம் சந்தா செலுத்தாத பயனர்களின் ப்ளூ டிக்கை நீக்க தொடங்கியுள்ள நிலையில் இவர்களது அங்கீகாரம் நீக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...