Published : 07 Apr 2023 09:44 AM
Last Updated : 07 Apr 2023 09:44 AM

சிட்டாய் மீண்டு வந்த நீலக் குருவி: மீண்டும் ட்விட்டர் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்!

கோப்புப்படம்

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மீண்டும் பழைய படி நீலக் குருவியாக மாற்றி உள்ளார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான ‘Dogecoin’ லோகோவை ட்விட்டரின் லோகோவாக அவர் மாற்றி இருந்தார். மஸ்கின் இந்த செயலுக்கு பின்னர் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. Dogecoin நிறுவன முதலீட்டாளர்கள் அவர் மீது தொடுத்துள்ள வழக்கை திசை திருப்பும் நோக்கில் இதை செய்திருக்கலாம் என்பது அதில் முதன்மையானதாக இருந்தது.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்தத் தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, ட்விட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் ட்விட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது.

அந்த வகையில் ட்விட்டர் நிறுவனத்தின் ட்ரேட்மார்க் அடையாளமாக இருந்த நீலக் குருவி லோகோவை மஸ்க் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாற்றி இருந்தார். அது குறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த மாற்றம் ட்விட்டர் வலைதள பக்கத்தில் மட்டுமே பிரதிபலித்தது. ட்விட்டர் மொபைல்போன் செயலியில் வழக்கமான அதே நீலக் குருவி லோகோவை தான் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் நாய் பட லோகோவை மாற்றிவிட்டு மீண்டும் குருவியை வைத்துள்ளார் மஸ்க்.

ட்விட்டர் தளம் தொடங்கப்பட்ட 2006 முதல் இதுவரை சில தருணங்களில் லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் முறையாக அண்மையில்தான் நீலக் குருவிக்கு பதிலாக நாய் படம் வைக்கப்பட்டது. மற்ற அனைத்து தருணங்களிலும் நீலக் குருவியில் சிறுசிறு மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் அதே நீலக் குருவி லோகோவாக ட்விட்டருக்கு திரும்பி உள்ளது. ‘எங்கள் தளத்தின் லோகோ எங்களது அடையாளம் மட்டுமல்ல அது எங்கள் சொத்து’ என ட்விட்டர் தளத்தின் பிராண்ட் டூல்கிட்டில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் மீண்டும் தன் அடையாளத்தை மீட்டெடுத்துள்ளது ட்விட்டர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x