Published : 20 Mar 2023 05:48 AM
Last Updated : 20 Mar 2023 05:48 AM

யூடியூப் வீடியோவை 'லைக்' செய்தால் பணம்: வெளிச்சத்துக்கு வந்த புதிய ரக இணையவழி மோசடி

கோப்புப்படம்

இ.ராம்கிருஷ்ணன்

சென்னை: சைபர் க்ரைம் மோசடிகளின் வரிசையில் புதிதாக யூடியூப் வீடியோவை `லைக்' செய்தால் பணம் கிடைக்கும் எனக்கூறி லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் நடைபெறுகின்றன. எனவே, கவனமாக இருக்க சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப உலகத்தில் ஸ்மார்ட்போன் பிரிக்க முடியாத சக்தியாக மாறிவிட்டது. போன்பயன்படுத்தாதோரின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது.

சூப்பர் மார்க்கெட் முதல் கடைக்கோடி பெட்டிக்கடை வரையிலும் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து அதன் மூலம் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. மேலும்ஆன்லைன் பணப் பரிவர்த்தனை பொது மக்களுக்குப் பயன் தந்தாலும் இணையவழி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதிலிருந்து விடுபட ‘விழிப்புணர்வு’ மட்டுமே பயன்படும் என சைபர் க்ரைம் போலீஸார் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தற்போது புது வகையான மோசடி நடைபெற்று வருவதாக சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கூறியதாவது:

வாட்ஸ்-அப்பில் பகுதி நேர வேலை (பார்ட் டைம் ஜாப்) என குறுந்தகவல் அனுப்புவார்கள். `என்ன வேலை' எனரிப்ளை செய்தால், ‘யூடியூப் வீடியோவை லைக் செய்வது’என பதில் தருவார்கள். உடனே நாம் லைக் செய்தால் பணம் வருமே, என நினைத்து ஒப்புக்கொள்வோம். அதன்படி, அவர்களின் யூடியூப் வீடியோவை லைக் செய்தால் ரூ.50, ரூ.100 ரூ.150, 200, 300, 400 என உடனடியாக பணம் வரும். இதனால், நாம் உற்சாகமடைந்து விடுவோம்.

இதையடுத்து அவர்கள் நம்மை டெலிகிராம் குரூப்பில் இணைத்து விடுவார்கள். அதில், `பகுதி நேரவேலை', `முதலீடு' என 2 வாய்ப்புதருவார்கள். பகுதி நேர வேலையைத் தேர்வு செய்தால் ஒரு பணியைக் கொடுப்பார்கள். அதற்கு மிகக் குறைந்த அளவு பணம் கட்ட வேண்டும். அதில் பல படிநிலைகள் இருக்கும். முதல் 2 படிநிலைகள் எளிதாக இருக்கும். சிறுவர்கள் கூட முடிக்கும் அளவுக்கு அவ்வளவு எளிதாக இருக்கும். அதை செய்துமுடித்த உடன் முதலீடு செய்தபணம் போக 30 முதல் 60 சதவீதம் வரை கமிஷனாக நமக்கு கிடைத்துவிடும். இருந்த இடத்திலிருந்தேபோன் அல்லது லேப் டாப்பிலேயே இதை முடிப்பதால் நமக்கு அதிகஆர்வம் ஏற்பட்டு விடும். ஆசையால் தூண்டப்பட்டு விடுவோம்.

இப்படி ரூ.13 ஆயிரம் வரைதிரும்ப வந்துள்ளது. அதற்கடுத்த படிநிலையாக ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் என படிப்படியாக ரூ.5 லட்சம் வரை தொகை கூடிக்கொண்டே இருக்கும். நாம் அவர்கள் கொடுக்கும் பணியை முடித்துவிட்டால், உதாரணமாக நாம் ரூ.10 லட்சம் கட்டியிருந்தால் கமிஷன் தொகை 50 சதவீதத்தையும் சேர்த்து ரூ.15 லட்சம் நமக்குக் கிடைக்க உள்ளதாக டிஸ்பிளேயில் காட்டும்.

இதனால், நாம் உற்சாகமடைந்து அதிகளவு பணத்தைச் செலுத்துவோம். ஒரு கட்டத்தில் பணத்தை எடுத்து விடலாம் என முயன்றால் அது முடியாது. உங்கள் அக்கவுன்ட் முடங்கிவிட்டது. பணத்தை எடுக்க வேண்டும் என்றால் உங்களுக்கு வர வேண்டிய ரூ.15 லட்சத்துக்கு 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். அதைச் செலுத்தினால் உங்களுக்கு முழு பணமும் கிடைத்துவிடும் என பதில் அளிப்பார்கள்.

இல்லையேல் நீங்கள் முன்பு செய்த டாஸ்க்கை தவறாகச் செய்து முடித்து விட்டீர்கள். இதனால், நீங்கள் இருக்கும் குழு நண்பர்கள் அனைவருக்கும் உங்கள் பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவார்கள். இப்படி ஒவ்வொரு காரணமாகச் சொல்லிக் கொண்டு பணத்தை வெவ்வேறு வழிகளில் கேட்டு பறித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால், எந்த பணமும் நமக்கு வந்து சேராது.

விழிப்புணர்வுதான் கேடயம்

இதுவே `முதலீடு' எனத் தேர்வு செய்தால், நமது சேமிப்பு பணம் முழுவதையும் முதலீடு செய்ய வைத்து அதிக வட்டி தருவதாகக் கூறுவார்கள். அதுவும் பொய்யே. எனவே கவனமாக இருக்க வேண்டும். மேலும் நமக்குத் தெரியாமலேயே நமது பெயரில் தனிநபர் கடன் (பர்சனல் லோன்) வாங்கப்படும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. தற்போது இணையவழி குற்றவாளிகளைக் கண்டறிவது சிரமமாக உள்ளது.

எனவே விழிப்புணர்வு ஒன்றே இணைய வழி குற்றங்களை தடுக்கும் கேடயம். அதையும் மீறி நீங்கள் ஏமாற்றப்பட்டால் உடனடியாக சைபர் க்ரைம் குறித்த புகார்களை 1930 என்ற கட்டணமி ல்லா தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தெரிவிக்கலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x