Published : 09 Mar 2023 09:09 PM
Last Updated : 09 Mar 2023 09:09 PM
சென்னை: எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுமார் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் உள்ளடங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து வங்கி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் பயனர் தரவுகளுக்கு அதிக டிமாண்ட் உள்ளன. ஒரு குறிப்பிட்ட தளத்தில் பயனர்களாக பதிவு செய்துள்ளவர்களின் பெயர், வயது, முகவரி, தொடர்பு எண், வங்கி கணக்கு விவரங்கள் போன்றவை இந்த தரவுகளில் பொதுவாக அடங்கும். இதை வைத்து இணையவழியில் மோசடி பணிகளை மேற்கொள்ளும் நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டி விடுவார்கள். அதனால், ஹேக்கர்கள் கண்கொத்தி பாம்பாக காத்திருந்து வலைதளத்தில் இருக்கும் லூப் ஹோல்கள் வழியே அந்த தளத்தில் உள்ள பயனர்களின் தரவுகளை மொத்தமாக எடுத்து விடுவார்கள். அதோடு அதை டார்க் வெப் தளங்களில் விற்பனைக்கும் கொண்டு வருவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு நிதி ஆதாயம். மறுபுறம் சம்பந்தப்பட்ட தளங்களும் இந்த தரவு விஷயத்தில் தொடர்ந்து பாதுகாப்பை உறுதி செய்து வரும்.
இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் சுமார் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் நிதி சார்ந்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இது டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
எச்டிஎஃப்சி வங்கி விளக்கம்: எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகள் எதுவும் கசியவில்லை. எங்கள் தளத்தில் எந்தவித மீறலும் நடைபெறவில்லை. அதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். வாடிக்கையாளர்களின் தரவுப் பாதுகாப்பில் நாங்கள் அதி தீவிர கவனம் செலுத்தி வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT