Published : 01 Mar 2023 06:02 PM
Last Updated : 01 Mar 2023 06:02 PM
சான்பிரான்சிஸ்கோ: உலக அளவில் ட்விட்டர் தள சேவைகள் முடங்கியுள்ளதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். #Twitterdown என பயனர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 200 ஊழியர்களை மஸ்க், பணி நீக்கம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபரில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் தளத்தை வாங்கி இருந்தார் எலான் மஸ்க். அப்போது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை அவர் ட்விட்டர் தளத்தில் மேற்கொண்டு வருகிறார். அதில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் அடங்கும். அதே நேரத்தில் அண்மைய காலமாக ட்விட்டர் தள சேவைகள் முடக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக நிரந்தர தீர்வை காண தனது குழுவினருடன் பணி செய்து வருவதாக மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனாலும் அதற்கு தீர்வு காணப்படவில்லை.
இந்நிலையில், இன்று உலக அளவில் ட்விட்டர் சேவைகள் முடங்கியுள்ளன. இது தொடர்பாக முடங்கப்பட்ட தளங்கள் குறித்த தகவலை வெளியிடும் ‘டவுன்டிட்டக்டர்’ தளத்தில் பயனர்கள் தெரிவித்துள்ளனர். செயலி, வலைதளம் மற்றும் சர்வர் இணைப்பில் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் தளத்தில் இணைப்பில் உள்ளவர்களின் ட்வீட்கள் மற்றும் டைம்லைனை பார்க்க முடியவில்லை என சில பயனர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தும் ட்ரெண்டிங் ஹேஷ்டேகுகளை பார்க்கவும், புதிய ட்வீட்களை பதியவும் முடிவதாக தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT