Published : 13 Jan 2023 09:20 PM
Last Updated : 13 Jan 2023 09:20 PM
அண்மைக் காலமாகவே இணையவெளியில் உலா வந்துக் கொண்டிருப்பவர்கள் ‘சாட்-ஜிபிடி’ (ChatGPT) குறித்து நிச்சயம் அறிந்திருக்கலாம். கடந்த ஆண்டின் இறுதி நாட்களில் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த டாக் அதிகமானது. நம் அன்றாட வாழ்வில் AI பயன்பாடு நமக்கே தெரியாமல் இருந்து வருகிறது. இருந்தாலும் உலக அளவில் இதன் திடீர் ரீச்சுக்கு காரணம் ChatGPTதான்.
அதன் பின்னர் பல ஏஐ சாட்பாட் டெவலெப்மென்ட் குறித்து அனைவரும் அறிந்து கொள்ள முடிந்தது. இது ஒருபக்கம் இருக்க, இந்த புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வீச்சு டெக் உலக சாம்ராட்களுக்கு வரும் நாட்களில் இம்சை கொடுக்கக் கூடும் என்ற கலக்கம் அந்நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், இந்தப் புதிய ஏஐ தொழில்நுட்பத்தின் வருகை கூகுள், யாஹூ போன்ற சர்ச் என்ஜின்கள் துவங்கி அலெக்சா, சிரி, கூகுள் அசிஸ்டன்ட் வரையில் அனைத்துக்கும் மாற்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது. பயனர்கள் கேட்கின்ற கேள்விக்கு பதில் சொல்வது, அலுவலகத்துக்கு விடுப்பு கடிதம் எழுதுவது, சிக்கலான புரோகிராம் கோட்களை தயாரிப்பது வரையில் அனைத்தும் அறிந்து வைத்துள்ளது இந்த ChatGPT. அதுதான் அந்த நிறுவனங்களுக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது.
ஆனால், மைக்ரோசாப்ட் மட்டும் அதிலிருந்து தப்பும் என சொல்லப்படுகிறது. ஏனென்றால், கடந்த 2019-ல் ChatGPT-ஐ வடிவமைத்த ஓபன் ஏஐ நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர்களை மைக்ரோசாப்ட் முதலீடு செய்திருந்தது. தொடர்ந்து சத்தமே இல்லாமல் மேலும் 2 பில்லியன் டாலர்களை அந்நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் முதலீடு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதன்மூலம் சர்வமும் அறிந்த இந்த ஏஐ தொழில்நுட்பத்தை தங்கள் நிறுவனத்தின் பல்வேறு புராடெக்ட்களில் சேர்க்கும் கணக்கை மைக்ரோசாப்ட் வகுத்து வருகிறதாம். இந்த முயற்சியை கூகுள், அமேசான், ஆப்பிள் போன்ற டெக் நிறுவனங்கள் மேற்கொள்ளாத நிலையில் சத்தமே இல்லாமல் அதில் முதலீடு செய்துள்ளது மைக்ரோசாப்ட்.
வரும் நாட்களில் மைக்ரோசாப்ட் இதனை தனது புராடெக்ட்களில் சேர்க்கும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் இந்த புதிய ஏஐ தொழில்நுட்பத்திற்கு மேலும் ஊக்கம் கொடுக்கும் வகையில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாம். அதோடு தங்கள் நிறுவன பயனர்களுக்கு இந்த புதிய ஏஐ தொழில்நுட்ப சேவையை வழங்க மைக்ரோசாப்ட் தயார் நிலையில் இருக்கும் எனவும் தெரிகிறது.
அண்மையில் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா இந்தியா வந்திருந்த போது ChatGPT குறித்து பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை வைத்துப் பார்க்கும்போது இந்த புதிய ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டில் மைக்ரோசாப்ட் முன்னோடியாக இருக்கும் என தெரிகிறது.
ஓபன் ஏஐ தரப்பில் ஜிபிடி-யின் பல்வேறு வெர்ஷன்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இது அதற்கு அசுர பலத்தை கொடுக்கலாம். இது தவிர பயனர்களின் கற்பனையை அப்படியே படமாக வரைந்து ஜெனரேட் செய்து கொடுக்கும் ஏஐ குறித்த டாக்கும் பரவலானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT