Published : 15 Dec 2022 02:28 PM
Last Updated : 15 Dec 2022 02:28 PM
சென்னை: ஆப்பிள் ஐபோனில் உள்ள ஓர் அம்சத்தின் உதவியின் மூலம் தக்க சமயத்தில் தகவல் பெற்று விபத்தில் சிக்கிய தன் மனைவியை மீட்டுள்ளார் ஒரு நபர். இது தொடர்பாக ரெடிட் சமூக வலைதளத்தில் விரிவாக அந்த நபர் பதிவு செய்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச் மூலமாக பல்வேறு சமயங்களில் இதற்கு முன்னர் அதன் பயனர்களின் இன்னுயிரை காத்த செய்திகள் குறித்து நாம் கேள்விப்பட்டதும் உண்டு. அந்த வகையில் ஆப்பிள் சாதனத்தின் துணை கொண்டு அண்மையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த முறை ஆப்பிள் ஐபோன் 14 அந்தப் பணியை செய்துள்ளது. ஐபோன் 14 சீரிஸில் ‘கிராஷ் டிடக்ஷன்’ என்றொரு அம்சம் இடம்பெற்றுள்ளது. அதன்படி விபத்து போன்றவற்றில் இந்த போனை வைத்துள்ளவர் சிக்கினால் தானாகவே அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கும் வசதியை இந்த அம்சம் மேற்கொள்ளும். அதோடு சம்பந்தப்பட்ட பயனரின் உறவினர்களுக்கு நோட்டிபிகேஷன் மூலம் தகவல் தெரிவிக்கும். இது பயனர்களுக்கு மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.
“நான் எனது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கடையில் இருந்து புறப்பட்டு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டது. போன அழைப்பும் துண்டிக்கப்பட்டது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அடுத்த சில நொடிகளில் அவர் பயன்படுத்தி வரும் ஐபோன் மூலம் எனக்கு ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. அதில் அவர் விபத்தில் சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு நிகழ்விடத்தின் தகவலும் வந்தது. அதை பயன்படுத்தி நான் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தேன். அதற்கு முன்பாகவே அந்த போன் மூலம் ஆம்புலன்ஸ் உதவிக்கு அழைப்பு சென்றுள்ளது. அதனால் அங்கு ஆம்புலன்ஸ் வந்திருந்தது.
எதிரே வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எனது மனைவி பயணித்த காரில் மோதியுள்ளது. இருவரும் தற்போது குணமடைந்து வருகின்றனர். ஐபோன் மட்டும் இல்லை என்றால் எனக்கு இதுகுறித்த எந்த விவரமும் தெரிந்திருக்காது. ஆப்பிள் நிறுவனத்தின் அவசரகால எஸ்ஓஎஸ்-க்கு நன்றி” என அந்த நபர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT